×

குமரி மருத்துவக்கல்லூரியில் பொது, கூடுதல் மருத்துவ கட்டிடங்களுக்கு ₹60 லட்சத்தில் இணைப்பு பாலம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

நாகர்கோவில், மே21 : குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.60 லட்சத்தில் நடக்கும் சிகிச்சை கட்டிட இணைப்பு பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் சுமார் 2500 நோயாளிகள் வந்து செல்கிறார்கள். 700க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக உள்ளனர். இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகள் கொண்ட பொது மருத்துவ கட்டிடமும், 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கூடுதல் பொது மருத்துவ கட்டிடமும் உள்ளது. கூடுதல் மருத்துவ கட்டிடத்தில் தான் டிஜிட்டல் எக்ஸ்ரே, ெபாது அறுவை சிகிச்சை துறை, முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொது சிகிச்சை வார்டு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் உள்ளன. பொது மருத்துவ கட்டிடத்தில் பிரசவ வார்டு, குழந்தைகள் நல சிகிச்சை, பச்சிளம் குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகின்றன.

இந்த பொது மருத்துவ கட்டிடத்தில் இருந்து கூடுதல் மருத்துவ கட்டிடத்துக்கு நோயாளிகளை கொண்டு செல்லும் போது  ஸ்ட்ரெக்சரில் வைத்து திறந்த வெளியில் தான் கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. வெயில் மற்றும் மழை நேரங்களில் அவசர தேவைக்காக நோயாளிகளை  கொண்டு செல்லும் போது கடும் சிரமம் உண்டாகிறது. எனவே இந்த இரு கட்டிடங்களையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் கடந்த ஓகி புயலின் போது, குமரி மாவட்டம் வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், மருத்துவக்கல்லூரியில் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இரு கட்டிடங்களையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்க அவர் உத்தரவிட்டார். மேலும் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுடன், மருந்து வினியோக கட்டிடத்துக்கு மேற்கூரையுடன் நடைபாதை, அவசர சிகிச்சை பிரிவை, பொது மருத்துவ கட்டிடத்துடன் இணைக்கும் வகையில் மேற்கூரையுடன் கூடிய நடைபாதை, புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடத்துடன், பொது மருத்துவ கட்டிட பிரிவை இணைக்கும் வகையில் நடைபாதை அமைக்கவும் உத்தரவிட்டார்.

இதற்கான பணிகள் டெண்டர் விடப்பட்டு தொடங்கின. இதில் ஏற்கனவே மேற்கூரையுடன் நடைபாதைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. பொது மருத்துவ கட்டிடம் மற்றும் கூடுதல் மருத்துவ கட்டிடத்தை இணைக்கும் வகையிலான இணைப்பு பாலம் அமைக்கும் பணி மட்டும் தற்ேபாது ரூ.60 லட்சம் செலவில் நடந்து வருகிறது. மொத்தம் 90 மீட்டர் நீளத்துக்கு இந்த இணைப்பு பாலம் அமைக்கப்படுகிறது. பாலத்தின் இரு பக்கமும் கிரில் பதிக்கப்பட உள்ளது. இந்த பணிகளை வருகிற ஜூலை மாதத்துக்குள் முடிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த பணிக்கான நிதி ஒதுக்கீடு தாமதம் ஆகி வருவதாக கூறப்படுகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால், எந்த திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு இல்லாமல் இருக்கிறது. நிதி பிரச்சினை காரணமாக பணிகளை வேகமாக நடத்துவதில் சிக்கல் இருப்பதாக பணியாளர்கள் கூறினர். எனவே ஜூன் மாதத்தில் இந்த பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, இணைப்பு பால கட்டுமான பணியை விரைவில் முடிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : buildings ,Kumari ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து