×

அம்பை தாமிரபரணி ஆற்றில் உயிர்பலிக்கு காத்திருக்கும் மரம்

அம்பை, மே 21: அம்பை தாமிரபரணி ஆற்றில் உயிர்பலிக்கு காத்திருக்கும் மருத மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பை தாமிரபரணி ஆற்றில், அம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் காலை, மாலை மட்டுமின்றி இரவு நேரங்களிலும் குளித்துச் செல்கின்றனர். இதனால் ஆற்றங்கரை பகுதியில் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும். விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் திரள்வதால் கூட்டம் நிரம்பி வழியும். இங்கு கரையோரத்தில் நூற்றாண்டுகளை கடந்த மருதமரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இதில் மேல அம்பை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் படித்துறை ஓரமுள்ள மருதமரத்தின் வேர் பகுதி வலுவிழந்து கொஞ்சம், கொஞ்சமாக சரிந்து வருகிறது. தற்போது மக்கள் குளிக்கும் படித்துறையையும் தாண்டி சாய்ந்த நிலையில் உள்ளது.

இந்த படித்துறையில்தான் அம்பை அகஸ்தீஸ்வரர் கோயில் திருவிழாவின்போதும், அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் நடைபெறும் வருஷாபிஷேகம், கும்பாபிஷேகம் போன்ற விழாக்களுக்கு பால் குடம் மற்றும் புனித தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது. மேலும் கரையோரத்தில் சொர்ண விநாயகர், சுந்தர விநாயகர் மற்றும் புருஷோத்தம பெருமாள் உள்ளிட்ட கோயில்கள் உள்ளது. தற்போது சுட்டெரிக்கும் கத்திரி வெயில் மற்றும் மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்து உள்ளதால் அம்பை ரயில்வே மேம்பாலம் படித்துறையில் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர். இங்குள்ள மருதமரம் எந்நேரமும் கீழே விழலாம் என்ற சூழல் இருப்பதால் ஒருவித அச்சத்துடனே மக்கள் குளித்து செல்கின்றனர். ஆபத்தை உணராமல் சிறுவர்கள் சிலர், மரத்தின் மீது ஏறி தண்ணீரில் குதித்தும் விளையாடுகின்றனர்.

இதுகுறித்து அம்பை மேலப்பாளையம் தெருவை சேர்ந்த முருகேசன் கூறியதாவது: படித்துறை அருகே சாய்ந்த நிலையில் உள்ள மரத்தை அகற்ற பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே மேம்பாலத்திற்கு மேற்புறம் 2 மரங்களின் அடிப்பாகத்திற்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதுபற்றி முறையிட்டும் நடவடிக்கை இல்லாத நிலையில், அந்த மரங்கள் சாய்ந்து 2 பேர் இறந்தனர். அதுபோன்ற விபரீதம் நடக்கும் முன்பு பொதுப்பணித்துறையினர், ஆற்றங்கரை ஓரத்தில் சாய்ந்து நிற்கும் மருதமரத்தை அகற்ற வேண்டும், என்றார்.

Tags : river ,
× RELATED கூழாங்கல் ஆற்றில் குளிக்கத் தடை