கோவில்பட்டி மங்கள விநாயகர் கோயில் சந்திப்பில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல்

கோவில்பட்டி, மே 21: கோவில்பட்டி நகரில் மந்தித்தோப்பு ரோடு மங்கள விநாயகர் கோயில் சந்திப்பு அருகிலேயே மினிபஸ் மற்றும் பேரூந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோவில்பட்டி நகரில் பிரதான சாலையாக எட்டயபுரம் மெயின்ரோடு உள்ளது. நகரில் உள்ள எட்டயபுரம் மெயின்ரோடு செண்பகவல்லியம்மன் கோயில் அருகே மந்தித்தோப்பு கிராமத்திற்கு செல்லும் மெயின்ரோடு சந்திப்பில் மங்கள விநாயகர் கோயில் உள்ளது. கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து குருமலை, மந்தித்தோப்பு, கடம்பூர் செல்லும் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் கிராமங்களுக்கு செல்லும் மினிபஸ்கள் மங்களவிநாயகர் கோயில் முன்புற சந்திப்பில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதேபோல மறுமார்க்கமாக வரும் வாகனங்களும் இதே சந்திப்பு அருகில் நின்று செல்கின்றன.

மேலும் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து பசுவந்தனை, தூத்துக்குடி, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் மற்றும் கிராமங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த மந்தித்தோப்பு ரோடு சந்திப்பு அருகிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. பொதுவாக மந்தித்தோப்பு ரோடு மங்கள விநாயகர் கோயில் சந்திப்பை கடந்து தினமும் ஏராளமானோர் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள்களில் செல்கின்றனர். இவ்வாறு கடந்து செல்லும்போது இந்த சந்திப்பு பகுதியில் இரு மார்க்கங்களிலும் அரசு, தனியார் பேரூந்துகள் மட்டுமின்றி மினிபஸ்களும் நின்று செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மட்டுமின்றி பாதசாரிகளும் விபத்துக்களை சந்திக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு மங்கள விநாயகர் கோயில் சந்திப்பு அருகிலேயே அரசு மற்றும் தனியார் பேரூந்துகள் மற்றும் மினிபஸ்களை நிறுத்துவதற்கு தடை விதித்து, அதற்கு பதிலாக சந்திப்பில் இருந்து சற்று தொலைவில் நின்று செல்லவும், மேலும் பஸ்கள் நின்று செல்லும் சாலையோரம் பஸ்கள் நிற்குமிடம் எனும் விளம்பர போர்டு அமைக்கவும், சாலைகளின் இரு மார்க்க பகுதிகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: