×

கருங்குளத்தில் தாமிரபரணிக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

செய்துங்கநல்லூர், மே 19:  கருங்குளத்தில் தாமிரபரணி நதியின் பிறந்த நாளை முன்னிட்டு பூஜைகள் செய்து பொதுமக்கள் தாமிரபரணியை காக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதி  நெல்லை, தூத்துக்குடி விருதுநகர் மாவட்டங்களுக்கு தினமும் பல கோடி லிட்டர் தண்ணீரை தந்து தாகத்தை தணிக்கிறது. இந்நதிக்கு  தாமிரபரணி மகாத்மியம் படி வைகாசி விசாகம் அன்று தான் பிறந்தநாள் என கூறுகிறார்கள். அகத்திய பெருமான் இன்றுதான் தாமிரபரணியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.

தாமிரபரணி நல இயக்கம் சார்பில் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் பிறந்தநாள்  கொண்டாடப்பட்டது. செய்துங்கநல்லூர் வாசகர் வட்ட தலைவர் திருமலைநம்பி தலைமை வகித்தார். மணக்கரை போஸ்ட்மாஸ்டர் காளிமுத்து, ஆறாம்பண்ணை சேக் அப்துல்காதர் முன்னிலை வகித்தார். தாமிரபரணிக்கு பூ தூவி சுலோகம் கூறினார். தொடர்ந்து தாமிரபரணியை பாதுகாக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதுகுறித்து காளிமுத்து கூறும்போது, 20 வருடமாக வடமொழி நூலான தாமிரபரணி மகாத்மியம் கூறியபடி வைகாசி விசாகத்தன்று தாமிரபரணிக்கு பிறந்த நாள் விழா நடத்தி வருகிறோம். இதுவொரு விழிப்புணர்வு விழா.

3 மாவட்டத்துக்கு குடிநீர் வழங்கும் தாமிரபரணி தற்போது சுரண்டப்பட்டு, சாக்கடை கலந்து உயிர் போக்கும் நதியாக மாறி வருகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே காரணம். இதனால் பிறந்தநாளை விழிப்புணர்வு விழாவாக கொண்டாடுகிறோம் என்றார். நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர் அபிஷ்விக்னேஷ் எழுதி இயக்கிய தாமிரபரணிக்கு நாம் தரும் பரிசு என்ற ஆவணபடம் வெளியிடப்பட்டது.  பட்டிமன்ற பேச்சாளர் முத்தமிழ் படத்தினை வெளியிட்டார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சிகாமராசு, ரவிராஜ், கண்ணன், நாகராஜபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Birthday celebration ,
× RELATED முதல்வர் பிறந்தநாள் விழா கால்பந்து...