×

நெல்லை டவுனில் சாலையோர கட்டிடம் இடிந்துவிழுந்து சேதம்

நெல்லை, மே 19:  நெல்லை டவுனில் சந்திப்பிள்ளையார் கோயில் - காட்சி மண்டபம் சாலையோரம் இருந்து வந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. கனரக வாகனம் மோதியதில் இச்சம்பவம் நடந்ததா? என்பது போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருவதால் டவுன் காட்சி மண்டபத்தில் இருந்து அருணாகிரி தியேட்டர் வரை குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி நெல்லையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம் செல்லும் பஸ்கள் அனைத்தும் வண்ணார்பேட்டை பைபாஸ் ரோடு, தச்சநல்லூர், ராமையன்பட்டி, கண்டியபேரி, பழையபேட்டை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

இதேபோல் பேட்டை, சேரன்மகாதேவி, சுத்தமல்லி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் சந்திப்பிள்ளையார் கோயில் வழியாக காட்சி மண்டபம் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சந்திப்பிள்ளையார் கோயில், காட்சி மண்டபம் சாலை மிகவும் குறுகலானது. எனவே அவை ஒருவழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களை கூட போலீசார் அனுமதிப்பதில்லை. இந்நிலையில் சந்திப்பிள்ளையார் கோயில் - காட்சி மண்டபம் சாலையில் நேற்று முன்தினம் இரவு சாலையோரம் இருந்த கட்டிடத்தின் கட்டிடத்தின் சிலாப் இடிந்து விழுந்ததுடன், கட்டிடம் சேதமடைந்தது. திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. தெற்கு மவுன்ட் ரோடு மூடப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் கனரக வாகனங்களும் இந்த வழியாக பயணிக்கின்றன. எனவே கனரக வாகனம் இடித்ததில் கட்டிடம் சேதமடைந்ததா? அல்லது இடிவிழுந்து சேதமடைந்ததா என்பது குறித்து போலீசார்
விசாரித்து வருகின்றனர்.

Tags : Nelli Town ,
× RELATED நெல்லை டவுன் பகுதியில் பந்தயக்...