×

நாகர்கோவிலில் வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தனர் ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை கடன் தொல்லையால் பரிதாபம்

நாகர்கோவில், மே 19 :  நாகர்கோவிலில் பிரபல தொழிலதிபர் கடன் தொல்லையால் குடும்பத்துடன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாகர்கோவில் வடசேரி வஞ்சி மார்த்தாண்டன் புதுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). தொழிலதிபர். இவர் வடசேரி பாலமோர் ரோட்டில் பல்பொருள் விற்பனை ஏஜென்சி நடத்தி வந்தார். இவரது மனைவி ஹேமா (48). இவர்களுக்கு ஷிவானி (21) என்ற மகள் உண்டு. இவர் குலசேகரம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோமியோபதி கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.

இவர்களுடன் சுப்பிரமணியின் தாயார் ருக்மணியும் (72) வசித்து வந்தார். வழக்கமாக காலையில் ஏஜென்சி ஊழியர்கள் வந்து, சுப்பிரமணியிடம் அலுவலக சாவியை வாங்கி செல்வார்கள். அதே போல் நேற்று (18ம்தேதி) காலை ஊழியர் ஒருவர் சாவி வாங்குவதற்காக சுப்பிரமணி வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டின் முன் பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக காலிங் பெல்லை அழுத்தியும் கதவு திறக்கப்பட வில்லை. பின்னர் சுப்பிரமணியின் மொபைல் போனை தொடர்பு கொண்டனர். 40க்கும் மேற்பட்டமுறை போன் செய்தும் யாரும் எடுக்கவில்லை. இதனால் ஊழியர்கள், அந்த பகுதியில் உள்ள ஹேமாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ஹேமாவின் தந்தை மற்றும் உறவினர்கள் வந்தனர். நீண்ட நேரமாக கதவை திறக்க முடியாததால், வீட்டின் இடது பக்க ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்றனர். அங்கு வீட்டின் மேல்மாடியில் உள்ள படுக்கை அறையில் சுப்பிரமணி, அவரது மனைவி ஹேமா, மகள் ஷிவானி,  தாயார் ருக்மணி ஆகியோர் பிணமாக கிடந்தனர். இதை பார்த்ததும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் குவிந்தனர். இது குறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாகர்கோவில் ஏ.எஸ்.பி. ஜவகர், வடசேரி இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். நால்வரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நால்வரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளனர். அவர்கள் இறந்து கிடந்த அறையில் குளிர்பான பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில் ஆகியவை இருந்தன. மேலும் வெள்ளை நிற பொடியும் 4 பாக்கெட்டுகளில் இருந்தன. இவற்றை போலீசார் கைப்பற்றினர்.

முதற்கட்ட விசாரணையில் சுப்பிரமணி, தனது தொழில் தொடர்பாக ஏராளமானவர்களிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், இந்த கடனை உரிய முறையில் திரும்ப செலுத்த முடியாமல் அவர், தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக  வீட்டில் ஏதாவது கடிதம் மற்றும் டைரி குறிப்புகள் உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் கடிதம் எதுவும் சிக்க வில்லை. இது குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். தொழிலதிபர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்
படுத்தி உள்ளது.

கந்து வட்டி பிரச்னையே 4 பேரின் தற்கொலைக்கு காரணம்
இந்த தற்கொலைகள் குறித்து சுப்பிரமணி மற்றும் ஹேமாவின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், கடன் பிரச்னை என்பதை விட கந்து வட்டி பிரச்னையால் தான் சுப்பிரமணி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். சுப்பிரமணியை விட, ஹேமா மிகவும் தைரியமானவர். குடும்ப பிரச்னைகளை அவர் எளிதில் கையாண்டு வந்தார். எனவே அவ்வளவு சீக்கிரம் இவர்கள் தற்கொலை முடிவுக்கு வந்து இருக்க மாட்டார்கள். பெரிய அளவில் மிரட்டலே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றனர். சுப்பிரமணி வீட்டில் உள்ள படுக்கை அறையில் காசோலைகளும் ஆங்காங்கே கிடந்தன. அதையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

நாடித்துடிப்பு இருந்ததால் பரபரப்பு
4 பேர் தற்கொலை குறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சுப்பிரமணி வீட்டு அருகில் டாக்டர் ஒருவர் உள்ளார். அவர் வந்து பரிசோதனை செய்து 4 பேரும் இறந்ததை உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் பற்றி அறிந்து ஷிவானியுடன் படிக்கும் சக மாணவர் ஒருவரும் வந்தார். அவர் ஷிவானியை பரிசோதனை செய்து நாடித்துடிப்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. அவசர, அவசரமாக ஆம்புலன்சு மூலம் தனியார் மருத்துவமனைக்கு ஷிவானியை ெகாண்டு சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் ஷிவானி இறந்ததை உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவரது உடல் மீண்டும் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

கதறி அழுத தொழிலாளர்கள்
சுப்பிரமணி நடத்தி வந்த ஏஜென்சி நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர். சுப்பிரமணி இறந்த தகவல் அறிந்ததும் அவர்கள் வீட்டு முன் திரண்டனர். அவர்களில் ஊழியர்கள் சிலர் சுப்பிரமணி உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. சுப்பிரமணி அதிகமாக யாரிடமும் பேசுவதில்லை. ஆனால் தொழிலாளர்களை பொறுத்தவரையில் அவர்களின் தேவைகளை முறையாக நிறைவேற்றி வந்துள்ளார் என்று ஊழியர்கள் கூறினர்.

2 தனிப்படை விசாரணை
இந்த சம்பவம் குறித்து ஏ.எஸ்.பி. ஜவகர், சுப்பிரமணியின் உறவினர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில் 4 பேர் தற்கொலைக்கான காரணம் இன்னும் உறுதியாக தெரிய வில்லை. கடன் பிரச்னையாக இருக்கலாம் என உறவினர்கள் கூறி உள்ளனர். கந்து வட்டி கொடுமை இருந்ததா? என்பது பற்றி விசாரணைக்கு பிறகே தெரிய வரும். பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் தற்கொலை எப்படி என்பது பற்றி கூற முடியும் என்றார். இது பற்றி விசாரணை நடத்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுப்பிரமணி, ஹேமா மற்றும் ஷிவானி ஆகியோரின் செல்போன்களுக்கு கடைசியாக வந்த அழைப்புகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

4 பூஜை அறைகள்
சுப்பிரமணியின் வீடு மிகவும் ஆடம்பரமான முறையில் கட்டப்பட்டு உள்ளது. வீட்டின் தரை தளத்தில் இரு பூஜை அறைகளும், வீட்டின் முதல் தளத்தில் ஒரு பூஜை அறையும், 2ம் தளத்தில் ஒரு பூஜை அறையும் உள்ளது. ஆன்மிகத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருந்து வந்த சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். அது தொடர்பான புத்தகங்கள் வீட்டில் அதிகளவில் இருந்தன. வீட்டின் 3 படுக்கை அறைகள் உள்ளன. இவை முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது ஆகும். இந்த வீட்டை 2 வருடங்களுக்கு முன் வங்கியில் கடன் பெற்றே சுப்பிரமணி கட்டியதாக அக்கம் பக்கத்தினர் கூறினர்.

Tags : house ,Nagarcoil ,bedroom ,suicide ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்