×

ரோகிணி கல்லூரி பட்டமளிப்பு விழா செயற்கைகோள் அனுப்புவதால் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட வாய்ப்பு இல்லை

அஞ்சுகிராமம், மே 19: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி நிறுவனர் நீலமார்த்தாண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன்நாயர், சந்திராயன் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முதுகலை மற்றும் இளங்கலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜேஷ் தலைமையில் மாணவர்கள் பட்டமளிப்பு விழா உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில், கல்லூரி நிர்வாக இயக்குநர் டாக்டர் நீலவிஷ்ணு, முதன்மை நிதி அதிகாரி டாக்டர் பிளசிஜியோ மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: ஜூலை மாதம் நிலவிற்கு செயற்கைகோள் அனுப்ப வாய்ப்பு உள்ளது. செயற்கை துணைக்கோள் நிலவை சுற்றிவரும். நான்குசக்கர வண்டி ஒன்று நிலவில் இறங்கி ஆய்வு செய்யும். வருங்காலத்தில் மனிதர்கள் நிலவுக்கு செல்லும்போது இறங்கும் இடம் மற்றும் நீர் இருக்கும் இடங்களை சந்திராயன் செயற்கை கோள்கள் நமக்கு காட்டுகின்றன. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.
நமது மங்கள்யான் செயற்கைகோள், கடந்த ஐந்து ஆண்டுகளாக செவ்வாய் கோளின் பருவநிலை மாற்றத்தை கண்டறிந்துள்ளது. நீரோட்டங்கள் இருந்ததற்கான வாய்ப்புகள் குறித்தும்,  மோகக்கூட்டங்கள் உருவாவது போன்றவை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே செவ்வாய் கிரகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. அதை நோக்கிய ஆய்வு இப்போது நடக்கிறது.

சீனாவில் இனி நடக்கப்போகும் மூன்றாவது ஒலிம்பிக் போட்டிக்கான வீரனை இப்போது உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோல அறிவியல் துறையிலும் சிறு வயது முதலே கொண்டுவர வேண்டும். அதற்காக 16 திட்டங்கள் வைத்துள்ளோம். அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வுக்கூடம் அமைத்து மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும். டாக்டர் படிப்பவர்கள் டாக்டராக வெளியே வருவது போன்று, இன்ஜினியரிங் படித்து வெளியே வருபவர்கள் புராஜக்ட்கள் செய்து இன்ஜினியராக வெளியே வரவேண்டும். மாணவர்கள் வெளியில் இருந்து பிராஜக்டுகளை வாங்குவதாக தகவல் வருகிறது.  எனவே தமிழ்நாடு அளவில் ஆயிரம் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் திட்டம் உள்ளது.

இதுபோன்று 16 திட்டங்கள் வைத்துள்ளோம். விண்வெளி திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் ஆய்வுக்கூடங்களை தாண்டி அனைவருக்குமானதாக ஆக வேண்டும். பொறியியல் கல்லூரிகள் அருகில் உள்ள சில பள்ளிகளை தத்தெடுத்து விஞ்ஞானம் குறித்து மாணவர்களுக்கு சொல்லிதர வேண்டும். செயற்கைகோள் அனுப்புவதால் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட வாய்ப்பு இல்லை. ஓசோனில் ஓட்டை இருப்பதை கண்டுபிடித்ததே செயற்கைகோள் மூலமாகத்தான். விண்வெளி துகள்கள் பெரும்பாலும் பூமியில் விழ வாய்ய்பு இல்லை. துகள்கள் வேகமாக பூமிக்கு வரும்போது காற்றில் உராய்வு ஏற்பட்டு அனைத்தும் எரிந்துபோகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Rokini College Graduation Ceremony ,ozone layer ,
× RELATED ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருகிறது... ஐ.நா அறிக்கை