பிளாஸ்டிக் கூரை வெப்பம் தாங்காமல் மலர்கள் கருகியது

ஊட்டி, மே 19:  ஊட்டி மலர் கண்காட்சி மாடங்களில் வைப்பதற்காக பல்வேறு மலர் செடிகள் ெதாட்டிகளில் நடவு செய்யப்படம். இம்முறை 35 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டது. அந்த தொட்டிகளில் உள்ள மலர்கள் மட்டுமின்றி, ஹாலாந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட துலிப்ஸ், ஆர்கிட் போன்ற மலர்களும் மாடங்களில் வைக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மாடங்களை ரூ.36 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த பழைய மாடத்தை அகற்றிவிட்டு புதிதாக மாடம் அமைக்கப்பட்டது. ேமலும், மாடத்தின் மேற்கூரை பாலி கார்பனேட் எனப்படும் கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் கூரை போடப்பட்டது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக மாடம் தற்போது காட்சியளித்தாலும், பிளாஸ்டிக் கூரை அப்படியே வெப்பத்தை ஈர்த்து விடுகிறது. இந்த வெப்பம் மலர்களின் மீது விழுவதால், மலர்கள் கருகிவிட்டன. பொதுவாக மாடங்களில் வைக்கப்படும் தொட்டிகள் 15 நாட்களுக்கு மேல் அப்படியே இருக்கும். ஆனால், இம்முறை மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரம் ஒரே நாளில் பாதித்துள்ளது.

நுழைவு வாயிலில் ரோஜா மலர்களை கொண்டு வைக்கப்பட்டுள்ள அலங்காரத்தில் உள்ள அனைத்து மலர்களும் காய்ந்து போய்விட்டன. இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கின்றனர். மேலும், இந்த மலர்களை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் மலர்கள் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக மாடங்கள் புதுப்பித்தோம். பிளாஸ்டிக் கூரையால் மலர்கள் பாதிக்காது என நினைத்தோம். ஆனால், மலர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மலர்கள் மாற்றப்படும். அதேசமயம், வெப்பம் உள் வாங்காமல் இருக்க பிளாஸ்டிக் கூரை மீது நைலான் வளை போடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம், என்றனர்.

Tags :
× RELATED பூக்கள் விலை உயர்வு