×

சூலூர் தேர்தலில் 16 ஆவணங்களை பயன்படுத்தி வாக்கு அளிக்கலாம்

கோவை, மே 19:தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு,  ஓட்டூநர் உரிமம், ஆதார் அட்டை  உள்பட 16 ஆவணங்களை பயன்படுத்தி சூலூர் தேர்தலில் வாக்கு அளிக்கலாம். இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி கூறியிருப்பதாவது:  சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்லுக்காக 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளதால் இங்கு நுண் பார்வையாளர்கள், துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்குச்சாவடிகளில் மின்சாரம், குடிநீர், கழிவறை உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சாய்வுதளம் அமைக்கப்பட்டு, சக்கரநாற்காலிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு  தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். சூலூர் தொகுதியில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைத்து அரசு, தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப் பதிவுக்காக அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 1 லட்சத்து 45 ஆயிரத்து 397 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 49 ஆயிரத்து பெண் வாக்காளர்கள் மற்றும் 18 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடி சீட்டு (பூத் ஸ்லீப்) வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்து மட்டுமே வாக்கு அளிக்க முடியாது. இது, வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்வதற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி சீட்டு (பூத் ஸ்லீப்) கிடைக்கப்பெறாதவர்களும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்பட 16 ஆவணங்களை பயன்படுத்தி வாக்கு அளிக்கலாம். ஏற்கனேவே மக்களவை தேர்தலில் வாக்கு அளித்ததற்காக இடது ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி வாக்காளர்களுக்கு இடது கையின் நடுவிரலில் வாக்கு அளித்ததற்கான அழியாத மை வைக்கப்படும்.

Tags : election ,Sulur ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...