கோபி அருகே சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் சேதம்

கோபி, மே 19: கோபி அருகே உள்ள காசிபாளையத்தில் சூறாவளி காற்றுக்கு சுமார் ரூ.ஒரு கோடி மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்தது. கடந்த ஒரு வார காலமாக கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ததில், காசிபாளையம், கணபதிபாளையம், காந்தி நகர், வன்னிமரத்துக்காடு உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சுமார் 20 ஆயிரம் வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து சேதமானது.

இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு சுமார் ரூ.ஒரு கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஒரு ஆண்டு காலமாக வாழை பயிரிடப்பட்டு வருகிறது. பல்வேறு பராமரிப்பு பணிகளுடன் வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழாமல் இருப்பதற்காக டேப் மூலம் கட்டப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்றுக்கு காசிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் ரூ.ஒரு கோடி  மதிப்புள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

இதில் வாழைக்கு பயிர் காப்பீடு செய்திருந்த நிலையில் இதுவரை காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்குவதில்லை. இந்நிலையில் ஒவ்வொரு விவசாயிக்கும் சுமார் ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர முறிந்து விழுந்த வாழை மரங்களை அப்புறப்படுத்த ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் சூறாவளி காற்றால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்யும் வகையில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்களில் இருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்றனர்.

Tags : hurricane wind ,Kobe ,
× RELATED அன்னூரில் சூறாவளி காற்று 11 லட்சம் வாழை மரங்கள் முறிந்து நாசம்