×

பெண் கொலை வழக்கில் கொலையாளியை பிடிக்க தனிப்படை

சத்தியமங்கலம், மே 19: சத்தியமங்கலம் அருகே நடந்து சென்ற பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பிரிவு காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (எ) ரங்கன். விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு லட்சுமி (25) என்ற மனைவியும், புனிதா என்ற மகளும், சபரி வாசன் என்ற மகனும் உள்ளனர். லட்சுமி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் பனியன் கம்பெனியில் தினசரி கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு லட்சுமி வேலைக்கு சென்று விட்டு இரவு 8 மணி அளவில் சத்தியமங்கலத்தில் இருந்து பஸ் ஏறி சிக்கரசம்பாளையம் பிரிவில் வந்து இறங்கி வீட்டிற்கு செல்வதற்காக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நடந்து சென்றுள்ளார்.

 அப்போது அவ்வழியே பைக்கில் வந்த நபர்கள் லட்சுமியை பிடித்து திடீரென கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு கத்தியை வீசி விட்டு தப்பி சென்றனர். கழுத்தில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.     இந்நிலையில் ஈரோடு எஸ்.பி. சக்தி கணேசன் உத்தரவின்பேரில் சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், தாளவாடி இன்ஸ்பெக்டர் அன்பரசு, பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் புதிய கத்தி கிடைத்துள்ளது.  அந்த கத்தி சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கியது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் போலீசார் லட்சுமிக்கும் கொலை செய்த நபருக்கும் கள்ளத்தொடர்பு காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலை லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : individual ,
× RELATED 10ம் வகுப்பு தேர்வுசிவகங்கையில் 17,867 பேர் எழுதினர்: 301 பேர் ஆப்சென்ட்