மன்னார்குடி அருகே திருராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

மன்னார்குடி, மே 19: மன்னார்குடி அருகே திருராமேஸ்வரம் கிராமத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெரு விழாவை முன்னிட்டு  தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து தேரை  இழுத்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருராமேஸ்வரம் கிராமத்தில் உள்ள மங்கள நாயகி உடனுறை ராமநாதசுவாமி கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் பிரசித்தி பெற்ற வைகாசி விசாக பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 15 வருடத்திற்கு முன்பும், கடந்த ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது இக்கோயிலில் சிதிலமடைந்த நிலையில் பழைய தேர் ஒன்று இருந்துள்ளது. இதன் வரலாறு குறித்து தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகாலில் இருக்கும் பழைய ஆவண குறிப்புகளின் அடிப்படையில் சுமா 150 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது என்ற குறிப்பு கிடைத்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக தேரோட்டம் நின்று போய்விட்டது.


இந்த தகவல்களை அறிந்த செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி தாளாளர் டாக்டர். திவாகரன் தனது சொந்த செலவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இக்கோயிலுக்கு புதிதாக தேர் ஒன்றினை செய்து கொடுத்தார். கடந்தாண்டு அதன் முதல் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. அதில் முக்கிய விழாவான திருத்தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. செங்கமலத்தாயார் கல்வி அறக் கட்டளை தாளாளர் முனைவர் திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் திவாகரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து வந்து நிலையடிக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து மங்கள நாயகி உடனுறை ராமநாதசுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அருகில் உள்ள தீர்த்த குளத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : devotees ,Ramanatha Swamy Temple ,Mannargudi ,Thirumesevarai ,
× RELATED பவானி கூடுதுறையில் புனித நீராட எல்லை தாண்டும் பக்தர்கள்