×

கும்பகோணத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு 6 வாகனங்கள் தகுதி நீக்கம்

கும்பகோணம், மே 19:  கும்பகோணம் வட்டார போக்குவரத்துக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு பணி கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் , வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வெங்கிடுசாமி,  தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமார், போக்குவரத்து காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினர். இதில் 44 பள்ளிகளில் உள்ள 118 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளதா, ஓட்டுனர்கள் உரிமம், அவர்களுக்கான அடையாள அட்டை, வாகனத்தில் அவசர வழிகள், காற்றோட்டமுள்ள ஜன்னல்கள், வாகனத்தில் எளிதில் வெளியில் வரக்கூடிய அளவில் இருக்கைகள், தரைதளம், முதலுதவி பெட்டி, படிக்கட்டுகள், வேக்கட்டுப்பாட்டுகருவி, தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து   வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் நிருபர்களிடம்  கூறுகையில்,


கும்பகோணம் சரகத்திற்கு உட்பட்ட 44 பள்ளிகளில் 159   பள்ளி வாகனங்கள் உள்ளன. இதில் நேற்று நடைபெற்ற ஆய்வில் 118 பள்ளி வாகனங்கள் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் வாகனங்களில் ஆபத்தின் போது வாகனத்தில் இருந்து வெளியேற அவசர வழிகள் உள்ளதா, தீயணைப்பு கருவிகள் உள்ளதா அவை சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த  ஆய்வில் 6 வாகனங்களில் உரிய பாதுகாப்பு கருவிகள், அவசர வழிகள் உள்ளிட்டவை இல்லாததால் அந்த வாகனங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது. மற்ற 112 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 41 வாகனங்கள் பள்ளி நிர்வாகத்தினர் பராமரிப்பு செய்வதற்காக கொண்டு சென்றுள்ளனர். பழுது செய்வதற்காக சென்ற வாகனங்களும், இந்த ஆய்வின் போது  தகுதி நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களை பராமரிப்பு செய்தும் வருகிற மே மாதம் 31ம் தேதிக்குள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.

Tags : Kumbakonam ,
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...