×

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி கலெக்டர் ஆய்வு

கரூர், மே 19: அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்துள்ளதாவது: அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு 250 வாக்குச்சாவடி மையங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில வாக்குப்பதிவுக்காக மொத்தம் (கூடுதல் கருவிகளும் சேர்த்து) 300 கட்டுப்பாட்டு கருவிகளும், 1200 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 325 வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன. மொத்தம் உள்ள 250 வாக்குச்சாவடி மையங்களும், 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 250 வாக்குச்சாவடி மையங்களிலும் மத்திய அரசு பணியில் உள்ள அலுவலர்கள் தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 29 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 கம்பெனியை சோந்த 192 துணை ராணுவப்படையினரும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 552 காவலர்கள் மற்றும் இதர மாவட்டங்களை சேர்ந்த 1070 காவலர்கள் என மொத்தம் 1622 காவலர்களும், 500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 60 புகார்களும், அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 45 புகார்களும் வரப்பெற்றுள்ளது.  அனைத்து புகார்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இதுவரை, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதற்காக ரூ. 4.5லட்சம் ரொக்கமும், 70 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ. 2.5லட்சம் உரியவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டது.


நடைபெறவுள்ள இடைத்தேர்தலை அமைதியான முறையில் நடத்திட தேவையான அனைதது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் அவர்களுக்கான ஆணைகள் வழங்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த நிகழ்வில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஈஸ்வரன், தேர்தல் பிரிவு தாசில்தார் மகேந்திரன் உட்பட அனைவரும் உடனிருந்தனர்.

Tags : assembly elections ,Aravasa Koki ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா