×

மறுவாக்குப்பதிவு தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம்

தேனி, மே 17: தேனி மாவட்டத்தில் மே 19ம் தேதி நடக்க உள்ள இரு வாக்குச்சாவடிகளுக்கான மறு வாக்குப்பதிவுக்கான வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் தேனி மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் , ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம்தேதி நடந்தது. இதனையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட தவறுகளை காரணம் காட்டி தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரத்தில் வாக்குச்சாவடி எண் 67க்கும், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடுகபட்டியில் வாக்குச்சவாவடி எண் 197க்கும் வருகிற 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த மாநில தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, இவ்விரு வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஒரு வாக்குச்சாவடிக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர் உள்ளிட்ட 6 பேரும், தலா ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு மைக்ரோ அப்சர்வருமாக மொத்தம் இருவாக்குச்சாவடிகளுக்கும் 12 வருவாய்த் துறை அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மறுவாக்குப்பதிவு இயந்திரங்கள் என எழுதி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட உள்ளது. அதேசமயம் ஏற்கனவே, மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எண்ணக்கூடாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் என எழுதி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கவும் மாவட்ட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags : election officials ,
× RELATED தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்...