×

ராமநாதபுரம் ஜிஹெச்சில் நவீன வசதிகளுடன் மகப்பேறு கட்டிடம் செயற்பொறியாளர் ஆய்வு

ராமநாதபுரம், மே 17: ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கு தனியாக அனைத்து வசதிகளும் கூடிய 5 அடுக்கு வளாகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் தற்போதைய குழந்தைகள் நல வார்டுக்கு எதிரே உள்ள இடத்தில் சுமார் 77,600 சதுர அடியில் அதி நவீன மருத்துவ சிகிச்சை அளிக்க கூடிய வகையில், மகப்பெறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்டும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. முதல் தளத்திற்கான பணிகளை பொதுப்பணித் துறை மருத்துவ பிரிவு செயற்பொறியாளர் சங்கரலிங்கம் ஆய்வு செய்தார்.

அவர் கூறுகையில், ‘மாவட்ட மருத்துவமனையில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் இரண்டும் ஒரே வளாகத்தில் தரை மற்றும் 5 தளங்களுடன் அமைகிறது. நோயாளிகளின் அவசர சேவைக்காக 2 லிப்ட், சக்கர நாற்காலி கொண்டு செல்ல சறுக்கு சாலை, அவசர தேவைக்காக மாடிப்படிகள் உள்ளது. தரை தளத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, பிரசவத்திற்கான அவசர பிரிவு, மெடிக்கல், லேப் உள்ளிட்டவைகளும், முதல் தளத்தில் பிரசவகாலத்திற்கு முன் கவனிப்பு மற்றும் அவசரகால சிகிச்சை பிரிவு.

இரண்டாவது தளத்தில் அதிதீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 2அறுவை அரங்குகளும், 3வது தளத்தில் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, குடும்பநல பிரிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு பிரிவும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஏற்படுத்தப்படவுள்ளது. 4வது தளத்தில் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகளும், 5வது தளத்தில் பேறுகால முன்கவனிப்பு பிரிவு ஆகியவையும் அமைய உள்ளது. 21 மாதத்திற்குள் இப்பணிகள் குறித்த காலத்தில் பணிகள் முடிவடையும்.

பெண்கள் கருதரித்தல் பரிசோதனை முதல் குழந்தை பிறந்த பின்பும் தேவையான சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து நவீன சிகிச்சை கருவிகள் உள்ளடக்கிய அரசு மருத்துவமனையாக அமையும்’என்றார். ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் ஜெயதுரை, உதவி பொறியாளர் ஜவகர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Ramanathapuram Ghech ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை