×

கூட்டுறவு தேர்தல் முறைகேடு வழக்கு வழக்கு போட்டவர்களிடம் சிறப்புக்குழு விசாரணை

ராமநாதபுரம், மே 17: தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பல இடங்களில் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டன. வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளை 4 மண்டலங்களாகப் பிரித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

தெற்கு மண்டலக் குழுவில் ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்ளன. குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனும், மதுரை, விருதுநகர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அந்த மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது முறையாக நடைபெற்ற விசாரணையில் ஓய்வுபெற்ற நீதிபதி ராமநாதன் முன்னிலையில், கூட்டுறவு சங்க புகார் தொடர்பான வழக்குகளில் ராமநாதபுரம் 11, கன்னியாகுமரி 2, தூத்துக்குடி 1, சிவகங்கை 10 என மொத்தம் 24 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. வழக்கு தொடுத்தவர்கள் வக்கீல்களுடன் வந்திருந்தனர்.

சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தேர்தல் அலுவலர்கள், வக்கீல்கள் ஆஜராகினர். விசாரணைக்கு பின் ஒரு சில வழக்குகளில் முடிவு எட்டப்பட்டதாகவும், மற்ற வழக்குகள் வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெறும் அடுத்த விசாரணையில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். கூட்டுறவு தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையில் திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். குழுவில் உறுப்பினராக உள்ள கலெக்டர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

Tags : Elections ,Special Case Investigation ,
× RELATED திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற...