×

மணப்பாறை அருகே ஊருக்குள் புகுந்த செந்நாய்களை விடிய விடிய விரட்டிய மக்கள்

மணப்பாறை, மே 17:  மணப்பாறை அருகேயுள்ள குப்பனார்பட்டியை சேர்ந்தவர் வடிவேல். விவசாயியான இவர்,  குருமலை வனப் பகுதியை ஒட்டிய குருமலை களம் காட்டில்  ஆட்டுக்கொட்டகை அமைத்து 25 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், வடிவேல், கடந்த 11ம் தேதி  காலை ஆடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக தனது ஆட்டுகொட்டகைக்கு வந்து பார்த்த போது ஆடுகள் காயமடைந்தும், மர்ம விலங்குகளால் ஆடுகளின் கழுத்து, வயிறு, கால் பகுதிகளில் கடிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தன. உடனடியாக பன்னாங்கொம்பு கால்நடை  மருத்துவமனை உதவி மருத்துவர்  தலைமையிலான குழுவினர், கொட்டகையில் இறந்த நிலையில் கிடந்த செம்மறி ஆடுகளை பரிசோதனை செய்தனர். இதில், 8 ஆடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும், காயமடைந்த 6 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். மருங்காபுரி தாசில்தார் பன்னீர்செல்வம் உள்பட வருவாய்த்துறையினரும், வனத்துறையினரும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அருகில் உள்ள காடுகளில் இருந்து காட்டு விலங்குகள், ஓநாய் அல்லது நரி இவை, ஆடுகளை கடித்து இருக்கலாம் என இப்பகுதி மக்கள், அப்போதே அச்சம் தெரிவித்த நிலையில், நேற்று காலையிலிருந்து இரவு வரை 10க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கூட்டம், ஊருக்குள் புகுந்துள்ளது.  இதனை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்து விரட்டியுள்ளனர். ஆனால், மீண்டும், மீண்டும் செந்நாய்கள் கூட்டம் - கூட்டமாக ஊருக்குள் வரவே, வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  எனவே, வனத்துறையினர் ஊருக்குள் முகாமிட்டு செந்நாய்களை வனப்பகுதிக்கே நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுத்து தங்கள் குழந்தைகளையும் பிழைப்புக்காக வளர்க்கும் ஆடு, மாடுகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sisters ,mallparaai ,town ,
× RELATED உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்..!!