×

கோட்டூர் அருகே காரைத்திடலில் 2 மாதமாக குடிநீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மன்னார்குடி, மே 17: கோட்டூர் அருகே காரைத்திடலில் 2 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கொள்ளி டம் வேதாரண்யம் கூட்டுகுடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் கும்மட்டித்திடல் ஊராட்சி காரைத் திடலில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கொள்ளிடம் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கும்மட்டித்திடல், புத்தகரம் வழியாக இரும்பு பைப் மூலம் தண்ணீர் எடுத்து சென்று காரைத்திடலில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் காரைத்திடலுக்கு முன்னால் உள்ள சில கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கொள்ளிடம் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட பைப் லைனில் சிலர் அனுமதியின்றி சொந்த உபயோகத்திற்கு தண்ணீர் எடுப்பதால் காரைத்திடல் பகுதிக்கு தண்ணீர் சென்று மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் குடிநீர் ஏற்றுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

இதனால் கடந்த 2 மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் தினம்தோறும்  சுமார் 4 கிமீ தூரத்தில் உள்ள நாச்சிக்குளம், கும்மட்டித்திடல் போன்ற பகுதிகளுக்கு பைக், சைக்கிள்கள் மூலம் சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை உள்ளது. இதனால் பொது மக்கள் குடிநீருக்காக ஆளாய் பறக்கின்ற சூழல் நிலவுகிறது. நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வருவதால் தினமும் பலமணி நேரம் செலவிட வேண்டியுள்ளது. மேலும் வேலைக்கு செல்வோர், கூலி  வேலைகளுக்கு செல்வோர் மற்றும் பெண்கள் பெருமளவில் பாதிப்படைந்து வேதனையில் உள்ளனர். எனவே காரைத்திடலுக்கு  கடந்த 2 மாதங்களாக குடிநீர் வரவில்லை என்பதை கொள்ளிடம் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பிரச்னைக்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து உடனடியாக காரைத்திடல் மக்களுக்கு குடிநீர் கிடைக்க போர்க்கால அடிப் படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காரைத்திடல் மக்களும், கிராம கமிட்டி நிர்வாகிகள் தியாகராஜன், சண்முகம், பால சுந்தரம் ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Demonstration ,civilians ,area ,Karithyadurai ,Kothiyar ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...