×

கூ.நல்லூர் பகுதியில் அடிக்கடி மின்தடை சீர்செய்ய வேண்டும் மிவா அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனு

கூத்தாநல்லூர், மே 17: கூத்தாநல்லூர் தாலுகாவில் தொடரும் மின்வெட்டை சரிசெய்யக்கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து வந்த புகார்களை அடுத்து மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது மன்னார்குடியில் இருந்து வரும் 110 கே.வி. மின்மாற்றியில் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட வெப்பத்தை குறைக்க வேறுவழிகள் இன்றி மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும், மின் அழுத்த வெப்பம் குறைந்தவுடன் மின்சார இணைப்பு தரப்படுவதாகவும் காரணம் கூறப்பட்டது. மேலும்  படிப்படியாக இந்த நிலை மாறும் எனவும் கூறப்பட்டது.

ஆனால் மின்தடை தொடர்ந்ததோடு,  நாள் ஒன்றுக்கு பலமுறை மின்சாரம் போய்வந்தது.  இதனால் கொளுத்தும் வெயிலில் பொதுமக்களும் குழந்தைகளும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் மின்சாரம் இருக்கும் நேரங்களிலும் குறைந்த அழுத்த மின்சார விநியோகத்தால் பல இடங்களில் ஏசி, பிரிட்ஜ், இன்வெர்ட்டர் உள்ளிட்டவைகள் சரிவர இயங்கவில்லை. இது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் கூத்தாநல்லூர் மின்வாரிய அலவலகத்தில் உதவி மின்பொறியாளர் சங்கர் கணேசை சந்தித்து மின்வெட்டை உடனே சரிசெய்து தரும்படியும், பொதக்குடி, சவுக்கத்தலிதெரு மற்றும் அத்திக்கடை சவுக்கத்தலிதெரு காதிரியா தெரு, சுக்காங்கேணி உள்ளிட்டபகுதிகளில் நிலவும் குறைந்த அழுத்த மின்சார விநியோகத்தை சீர்செய்து தரவும் கேட்டு கொண்டு கோரிக்கை மனு அளித்தார். அப்போது மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் நைனாஸ் அகமது, முகமது ஜான், நிஜாமுதீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : Nallur ,area ,People's Party ,
× RELATED பொன்னமராவதி அருகே ஊராட்சி செயலரை தாக்கியவர் மீது வழக்கு