×

அயிலாங்குடி பெரிய கண்மாயில் மீன் வளர்க்க அனுமதி கோரி வழக்கு 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

ஒப்பந்தத்தின் அடிப்படையில்
மதுரை, மே 17: 2014ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெரிய கண்மாயில் மீன் வளர்க்க அனுமதிக்க வேண்டும் என ெதாடரப்பட்ட வழக்கில், 4 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு ஐகோர்ட் மதுரை உத்தரவிட்டது.  மதுரை மாவட்டம் ஒய்.கொடிக்குளத்தை அடுத்த அயிலாங்குடியை சேர்ந்தவர் சித்தம்மாள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டம் அயிலாங்குடி பெரிய கண்மாயை 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தோம். அன்று முதல் 3 ஆண்டுகள் அந்த கண்மாயில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தோம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக முறையாக மழை இல்லாததால், பெரிய கண்மாயில் மீன்கள் வளர்க்க முடியவில்லை. இதனால் நஷ்டம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், 2018-19ம் ஆண்டுக்கான குத்தகை தொகையாக ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 281ம், நல வாரிய நிதியாக ரூ.8 ஆயிரத்து 858ம் செலுத்து உள்ளோம். இதற்கிடையே கண்மாய்கள் பராமரிப்பு தொடர்பான வழக்கில் நீர்நிலைகளில் மீன்கள் வளர்க்கக்கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டதாகக்கூறி, கண்மாயில் நாங்கள் மீன்கள் வளர்க்க விடாமல் அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். ஆனால், இந்த கண்மாயை பொறுத்தவரையில் தண்ணீரை வெளியேற்றுவதில்லை. தண்ணீர் இருக்கும் போதே மீன்களை பிடித்து விடுகிறோம். எனவே விதிகளை மீறாமல் செயல்பட்டு வரும் எங்களையும் மீன்கள் வளர்க்கக்கூடாது என அதிகாரிகள் தடுக்கிறார்கள்.

எனவே 2014ம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அயிலாங்குடி பெரிய கண்மாயில் நாங்கள் மீன் வளர்க்க அனுமதிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நாங்கள் செலுத்திய ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 139ஐ 12 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், மனுதாரரின் கோரிக்கை குறித்து 4 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : court ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...