×

மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் விருதுநகர் தொகுதி வாக்குகள் 23 சுற்றுகளில் எண்ணி முடிக்கப்படும்

விருதுநகர், மே 17: விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் 23 சுற்றுகளிலும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குகள் 21 சுற்றுகளிலும் எண்ணி முடிக்கப்பட உள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் ஆண்கள் 7,24,093, பெண்கள் 7,56,377, இதரர் 130 மொத்தம் 14,80,600. இவற்றில் பதிவான வாக்குகள் ஆண்கள் 5,19,700 பெண்கள் 5,46,508, இதரர் 9 மொத்தம் 10,66,217 வாக்குகள் பதிவாகி உள்ளன. 72.01 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஆண்கள் 1,15,388, பெண்கள் 1,21,288, இதரர் 20 மொத்தம் 2,36,696 பேர். இவற்றில் பதிவான வாக்குகள் ஆண்கள் 88,472 பெண்கள் 98,388, திருநங்கை 1 மொத்தம் பதிவான வாக்குகள் 1,86,861. பதிவான சதவீதம் 78.946. அரசு ஊழியர்களுக்கு 14 ஆயிரம் தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வரை 7 ஆயிரம் தபால் ஓட்டுகள் வந்து சேர்ந்துள்ளன.

வாக்கு எண்ணிக்கை நாளான மே23ம் தேதி காலை 8 மணி வரை வரும் தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் சேர்க்கப்படும். மேலும் ராணுவத்தில் உள்ள 3,400 பேருக்கு சர்வீஸ் ஓட்டுகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் 1,800 ஓட்டுக்கள் நேற்று வரை வந்து சேர்ந்துள்ளன.  விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குகள் செந்திக்குமார நாடார் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளது.
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 14 மேஜைகளில் நடைபெற உள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார்வையாளர் பணியில் இருப்பர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 42 பணியாளர்கள் வீதம் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 252 பணியாளர்கள் எண்ணிக்கை மையத்திற்குள் பணியில் இருப்பார்கள்.

மே23ம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும், வாக்கு எண்ணிக்கையின் முதல் அரைமணி நேரம் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தபால் ஓட்டுகள் வேட்பாளர் அடிப்படையில் 50 தபால் ஓட்டு கட்டுகளாக போட்டு எண்ணப்படும். அத்துடன் சர்வீஸ் ஓட்டுகள் (ராணுவத்தினர்) எண்ணப்படும். அதை தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை துவங்கும். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள விருதுநகர் சட்டமன்ற தொகுதியின் 255 வாக்குச்சாவடிகளின் வாக்குகள் தலா 14 மேஜைகளில் 19 சுற்றுகளிலும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் 283 வாக்குச்சாவடி வாக்குகள் 21 சுற்றுகளில் எண்ணி முடிக்கப்படும். அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் 252 வாக்குச்சாடிவ வாக்குகள் 18 சுற்றுகளிலும், சிவகாசி சட்டமன்ற தொகுதியின் 276 வாக்குச்சாவடி வாக்குகள் 20 சுற்றுகளில் எண்ணி முடிக்கப்படும். திருப்பரங்குன்றம் தொகுதியின் 297 வாக்குச்சாவடி வாக்குகள் 22 சுற்றுகளிலும், திருமங்கலம் தொகுதியின் 310 வாக்குச்சாவடி வாக்குகள் 23 சுற்றுகளிலும் எண்ணி முடிக்கப்படும்.

பகல் 11 மணியளவில் முன்னணி நிலவரங்கள் தெரியவரும். மதியம் 1 முதல் 3 மணிக்குள் அனைத்து மின்னணு இயந்திரங்களும் எண்ணி முடிக்கப்படும். இருப்பினும் இம்முறை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 வாக்குச் சாவடிகளின் விவிபேடு இயந்திரத்தில் பதிவான வாக்களித்த ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். ஒப்புகை சீட்டுகளும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் சரியாக இருக்கும் பட்சத்தில் முடிவுகள் வெளியிட இரவு 8 மணியாகும் என தெரிவிக்கின்றனர்.
பாக்ஸ்: அதிகாரபூர்வ அறிப்பு இரவு 8 மணிக்கு மேல் வெளியாகும் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 வாக்குசாவடிகளின் வாக்காளர் காகித தணிக்கை இயந்திரங்கள் குழுக்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அவற்றில் வாக்காளர்கள் வாக்களித்த ஒப்புகை சீட்டுகள் வேட்பாளர் அடிப்படையில் 25 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக போடப்படும். ஒவ்வொரு வாக்காளருக்கும் கிடைத்த ஒப்புகை சீட்டுகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்ட பிறகே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். அதனால் இந்த முறை வாக்கு எண்ணிக்கை அதிகாரப்பூர்வ முடிவுகள் இரவு 8 மணிக்கு மேல் வெளியாகும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : constituency ,Virudhunagar ,rounds ,
× RELATED எடப்பாடி பிரதமராக வாய்ப்பிருக்கு…: ஜோசியம் சொல்லும் பிரேமலதா