×

சிவகாசி-சாத்தூர் சாலை பாலம் அருகே நடு ரோட்டில் மின் கம்பம் விபத்தில் பலர் பலியாகும் சோகம்

சிவகாசி, மே. 17: சிவகாசி-சாத்தூர் செல்லும் சாலையில் அரசு பஸ் பணிமனை அருகே உள்ள பாலத்தின் நடுவில் மின் கம்பம் அமைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றனர். சிவகாசி-சாத்தூர் சாலை 10 மீட்டர் அகல சாலையாகும். இந்த சாலையில் கடந்த 5 ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. சாலையில் இடையிடையே பேஜ் ஒர்க் பணிகள் மட்டும் நடைபெற்றது. இதனால் இந்த சாலையில் ஆங்காங்கே மேடு பள்ளங்களாக உள்ளது. சாலையில் பல இடங்களில் தார் பெயர்ந்து கற்கல் வெளியே தெரிகின்றன. இநனிடையே கடநத் ஏப்ரல் மாதம் முதல்வர் தேர்தல் பிரசாரத்திற்கு சிவகாசி வருகை தந்தாா். முதல்வர் வருகையை ஒட்டி காமராஜர் பள்ளி அருகே இருந்து மீனம்பட்டி வரை மட்டும் புதிதாக சாலை போடப்பட்டது. சிவகாசி-சாத்தூர் சாலை மதுரை-கன்னியாகுமரி தேசிய சாலையில் இணைப்பு சாலையாக உள்ளதால் இந்த சாலையில் வாகன பெருக்கம் அதிகமாக இருக்கும்.

இந்த சாலை வழியாக சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, தூத்துகுடி, திருச்செந்தூர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் போன்ற ஊர்களுக்கு அரசு, மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர தென்மாவட்டத்தில் இருந்து சுற்றுலா வரும் பஸ்கள், வேன்கள் இந்த சாலையில் அதிகம் செல்லும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் பாதுகாப்பு எச்சரிக்கை பதாகைகள், இரவில் ஒளிரும் டிவைடர்கள், வளைவில் தடுப்புகள் எதுவும் இல்லை.
இதனால் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்கிறது. இதனிடையே சிவகாசி அருகே அரசு பஸ் பணிமனை எதிரில் உள்ள பாலத்தின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக மின் கம்பம் உள்ளது.

இரவு நேரங்களில் இந்த மின்கம்பத்தில் மோதி வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாததால் வாகன விபத்துக்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. மின்வாரிய அதிகாரிகளும் இதனை அகற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இதே போன்று இந்த சாலையில் பள்ளங்கள் அதிகளவில் உள்ளதால் இரவு நேரங்களில் சாலையின் நடுவில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் பலர் விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றனர். இந்த சாலை 17 கி.மீ. தூர சாலையாகும். இதில் 10 கி.மீ. தூரம் வரை குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்திற்கு பயனற்ற சாலையாக உள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நெடுஞ்சாலை துறையினர் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,accident ,road bridge ,Sivakasi-Sattur ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...