×

வாக்கு எண்ணும் நாளில் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

திருப்பூர், மே 17:திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் நாளான 23ம் தேதியன்று வேட்பாளர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான ஆய்வுகூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனிச்சாமி பேசியது: திருப்பூர் மக்களவை தொகுதிக்கான அனைத்து வாக்குகளும் திருப்பூர்-பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி., அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் அமைந்துள்ள வாக்குகள் எண்ணும் மையத்தில் வரும் 23ம் தேதியன்று காலை 8 மணிக்கு எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையத்தின் வெளிக்கதவிலிருந்து, இருபுறமும் 100 மீட்டர் எல்லைக்குள் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்பட மாட்டாது. மேற்படி எல்லையிலிருந்து அனைவரும் நடந்தே  மையத்திற்குள் வரவேண்டும். வேட்பாளர், தேர்தல் முகவர், வாக்கு எண்ணும் முகவர் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். மையத்திற்குள் கைபேசி, சிகரெட் உள்பட தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை.

6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மேஜைக்கு நியமிக்கப்பட்ட முகவர்கள் தங்களுக்குரிய மேஜையின் அருகே மட்டுமே இருத்தல் வேண்டும். வாக்குகள் எண்ணும் அறையின் இதர பகுதிகளுக்கு எக்காரணம் கொண்டும் செல்லக்கூடாது. ஒவ்வொரு அறையிலும் உதவிதேர்தல் அலுவலர் தலைமையில் வாக்கு எண்ணும் பணிநடைபெறும். உதவிதேர்தல் நடத்தும் அலுவலர் மேஜை முன்பாக வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவர் அமர்ந்து வாக்குகள் எண்ணும் பணியை பார்வையிடலாம். வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜையின் அருகே இல்லாத நேரத்தில், பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட  முகவர் பார்வையிடலாம்.  வாக்குச்சாவடி வாரியாக ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகள் குறித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலிருந்து பெறப்பட்ட முடிவு விவரங்கள் தொகுக்கப்படும்.  வாக்குகள் எண்ணும் பணி துவங்குவதங்கு முன்னதாக 23ம் தேதி காலை சரியாக 8 மணிக்கு  அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணிதுவங்கப்படும். அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி முடிவடைந்து அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று துவங்கப்படும்.

முடிவு விவரங்களை முகவர்கள் பார்வையிடும் வகையில் காண்பிக்கப்படும் போது முகவர்களும் இவற்றை குறித்துக் கொள்ளலாம். அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் பதிவான வாக்குகள் விவரம் எண்ணிமுடிக்கப்பட்ட பின்னர், குலுக்கல் முறையில் 5 வாக்குச்சாவடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த 5 வாக்குச்சாவடிகளுக்கான விவிபேட் இயந்திரங்களில் உள்ள அச்சிடப்பட்டசீட்டுகள் எண்ணி சரிபார்க்கப்படும்.  ஒவ்வொருசுற்றிலும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் வாரியாக பதிவான வாக்குகள் எண்ணிக்கை விவரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், வாக்குகள் எண்ணும் முகவர்கள் அறியும் வண்ணம் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்படும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், வருவாய் அலுவலர் நெடுஞ்சாலைகள் மீனாட்சி சுந்தரம், மாநகர போலீஸ் துணை கமிஷனர்  உமா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாஷியம், கீதா பிரியா, தேர்தல் வட்டாட்சியர் முருகதாஸ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு