×

கவுன்சிலர் தேர்தலில் கூட கமல் கட்சி வெற்றி பெறாது ‘சீறுகிறார்’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கவுன்சிலர் தேர்தலில் கூட நடிகர் கமல் கட்சி வெற்றி பெற முடியாது என்று ஓட்டப்பிடாரம் பிரசாரம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், கடந்த 25 நாட்களுக்கும் மேலாக முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வீடு, வீடாக இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஓட்டப்பிடாரத்தில் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடந்தது. சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், தேர்தலுக்கு ஓரிரு நாட்களே உள்ளதால் பொறுப்பாளர்கள் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் நமது பிரசார வியூகம் இருக்க வேண்டும். எடப்பாடியார் அரசின் மக்கள் நலத்திட்டங்களை ஒவ்வொரு வாக்காளர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

தினமும் வீடு, வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்க வேண்டும். அரசு அறிவித்த ரூ.2000 உதவித்தொகை தேர்தல் முடிந்தவுடன் கொடுக்கப்படும் என்றும் சொல்ல வேண்டும். நமது மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 பூத்களில் 25 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று நமது பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.  தூக்கமின்றி நமது உழைப்பை கட்சிக்காக கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ஓட்டப்பிடாரம், பெரியநத்தம், சுப்பிரமணியபுரம் கிராமங்களில் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சர் பேசும்போது, எடப்பாடி அரசு தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஓட்டப்பிடாரத்தில் சாதாரண தொண்டனை அதிமுக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவரை வெற்றி பெற செய்து சட்டசபைக்கு அனுப்புங்கள். உங்கள் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வரிடம் பேசி மோகன் பெற்று தருவார்.

தேர்தலுக்குப்பிறகு ஓட்டப்பிடாரம் தொகுதி மிகப்பெரிய வளர்ச்சி பெறும். பிரசார களத்தில் கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார். அரசியலில் கமல் ஒரு கத்துக்குட்டி. கமல்ஹாசன் கட்சி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. இந்த தேர்தலில் இவரது கட்சிக்கு எவ்வளவு ஓட்டு விழும் என்று பார்த்து விடுவோம். அவருக்கு யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள். எடப்பாடி ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி. அது தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : council election ,Rajendra Balaji ,party ,Kamal ,Rajasingh Balaji ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு:...