×

திருநள்ளாறு தொகுதியில் சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி விநியோகம்

காரைக்கால், மே 17:  காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில், சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 20 கிலோ இலவச அரிசி விநியோகம் தொடங்கியது. புதுச்சேரி அரசு மஞ்சள் மற்றும் சிகப்புநிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கி வந்தது. முதல்வர் மற்றும் கவர்னர்களுக்கிடையே ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு, 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசிக்கான தொகை வங்கியில் செலுத்தும் வகையில் கவர்னர் கடந்த ஒரு மாதத்துக்கு முன் அனுமதி அளித்தார். தேர்தல் நடத்தை விதியால் அரிசி வழங்குமுறை தடைபட்டது. தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தலுக்குப் பின் இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி கூறியிருந்தார். தேர்தல் ஆணையமும் அரிசி வழங்குவதற்கு தடையில்லை எனக் கூறியதையடுத்து, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதியிலிருந்து புதுச்சேரி மாநிலத்துக்குத் தேவையான இலவச அரிசியை வரவழைக்க புதுச்சேரி அரசு ஏற்பாடு செய்தது. இதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் துறையில் சுமார் 30 ஆயிரம்  சிவப்பு நிற அட்டை உள்ள நிலையில், இவர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான 20 கிலோ அரிசி வழங்கும் வகையில் முதல்கட்டமாக 50 டன் அரிசி காரைக்காலுக்கு கடந்த வாரம் வந்து சேர்ந்தது. முதல்கட்டமாக திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட அம்பகரத்தூர், நல்லம்பல், செல்லூர், தேனூர், பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் சிவப்பு அட்டைக்கு 20 கிலோ வீதம் வழங்கப்பட்டது. மற்ற பகுதியினருக்கு படிப்படியாக அரிசி வருவதை கொண்டு வழங்கப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : red card holders ,constituency ,Tirunallar ,
× RELATED நெல்லை மக்களவை தொகுதி; ஸ்ட்ராங்க் ரூம் சாவி தொலைந்ததால் பூட்டு உடைப்பு!