×

மீனவர்களுக்கு வழங்குவது போல் ஐஸ்கட்டி உற்பத்தியாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் 10 ஆண்டு கால கோரிக்கைக்கு விரைவில் தீர்வு கிடைக்குமா?

நாகை, மே17: மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுபோல் மீன் பதப்படுத்தும் ஐஸ்கட்டி உற்பத்தியாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாகை மாவட்ட ஐஸ் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். நாகை மாவட்டம் என்றால் முக்கியமான தொழில் கடல் சார்ந்தது ஆகும். மீன்பிடித்தல், படகுகள் தயாரித்தல், கருவாடு உற்பத்தி செய்தல், பிடித்த மீன்களை பதப்படுத்த ஐஸ் கட்டி உற்பத்தி செய்தல் உள்ளிட்டவையே நாகை மாவட்டத்தை பொருத்தவரை பிரதான தொழில் ஆகும். மீன்பிடி தொழிலை மட்டும் நம்பி நாகை மாவட்டத்தில் பழையார், தரங்கம்பாடி,  அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் கோடியக்கரை ஆகிய இடங்கள் உள்ளது. மீன்பிடிக்க ஆழ் கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்கள் கரைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் ஆகும். அவ்வாறு ஆழ்கடலில் பிடிக்கப்படும் மீன்களை பதப்படுத்துவதற்காக கடலுக்கு செல்லும் போதே ஐஸ் கட்டிகளை மீனவர்கள் வாங்கி செல்வார்கள். இதற்காக நாகை மாவட்ட  கடலோர பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஐஸ் உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஐஸ் உற்பத்தி நிலையில் இருந்து நாள் ஒன்றுக்கு 700 டன் வரை ஐஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை விசைப்படகுகளுக்கு மொத்தமாக மீன்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மீன்கள் இனப்பெருக்க காலமான  ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். இந்த காலத்தில் கடல் சார்ந்த எல்லா தொழில்களும் பாதிக்கப்படும். இதில் ஐஸ் உற்பத்தி தொழில் அதிக அளவில் பாதிக்கப்படும். இந்த காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போல் ஐஸ் உற்பத்தியாளர்களுக்கும், அதை சார்ந்த தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் மானியத்துடன் வங்கி கடன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

Tags : fishermen ,ice cream producers ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...