×

பவானிசாகர் அருகே வாழைத் தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம்

சத்தியமங்கலம், மே 17:  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட விளாமுண்டி வனச்சரகத்தில் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் தினமும் இரவில் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டு உள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை பவானி சாகர் காவலர் குடியிருப்பு எதிர்புறம் உள்ள விவசாயி அப்புசாமி (55) என்பவர் வாைழ தோட்டத்தில் நுழைந்தது. தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது.

இதை கண்ட விவசாயி அப்புசாமி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அக்கம் பக்கத்து விவசாயிகளுடன் இணைந்து பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயற்சித்தார். யானை வெகுநேரமாக வாழைத் தோட்டத்தில் முகாமிட்டு 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டு பின்னர் வனத்துறையினர் வந்து பட்டாசு வெடித்து விரட்டி அடித்த பின் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த ஒற்றை யானை கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் விவசாய பயிர்களை சேதம் செய்து வருவதாகவும் விவசாயி அப்புசாமி தோட்டத்தில் இதற்கு முன்பு இரண்டு முறை நுழைந்து வாழைகளை சேதப்படுத்திய ஒற்றை யானை  தற்போது மீண்டும் வாழை மரங்களை சேதப்படுத்தியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சேதமடைந்த 100க்கும்  மேற்பட்ட வாழை மரங்களுக்கு வனத்துறை தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : banana garden ,Bhavanisagar ,
× RELATED 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பவானிசாகர் அணையின் மீது விழிப்புணர்வு பேனர்