×

போக்குவரத்தை சீரமைக்க அரசு மருத்துவமனை ரோட்டில் புதிய சிக்னல்

ஈரோடு, மே 17:போக்குவரத்து சீரமைக்க அரசு மருத்துவமனை ரோட்டில் புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகரில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பன்னீர்செல்வம் பார்க், அரசு தலைமை மருத்துவமனை பகுதி, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை சரிசெய்ய மாநகரின் மைய பகுதியான அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் ரூ.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால், மேம்பாலம் கட்டப்பட்ட நிலையில் இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்களும், சிறிய நான்கு சக்கர வாகனங்களும் மட்டுமே செல்கிறது. பெருந்துறை, திருப்பூர், கோவை செல்லும் அனைத்து பஸ்களும் பாலத்தின் கீழ்  வழியாகவே சென்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க கட்டப்பட்ட மேம்பாலத்தால் எந்த பயனும் இல்லை. பாலத்தின்கீழ் பகுதியில் தனியார் வாகனங்களை நிறுத்திக் கொள்ளும் ஸ்டாண்டாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக, இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும், இப் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க சிக்னல் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. இதைத்தடுக்க மேம்பாலத்தின்கீழ் பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிக்னலில் வாகனங்கள் அதிகமாக வரும் நேரம், குறைவாக வரும் நேரம் என சிக்னலில் நிமிடம் அமைப்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 5 ரோடுகள் சந்திக்கும் பகுதியாக உள்ளதால் சிக்னல் அமைத்து கண்காணித்தால் ஓரளவு விபத்து குறைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறுகையில்,`ஈரோடு மாநகரின் மைய பகுதியாக அரசு தலைமை மருத்துவமனை ரோடு உள்ளது.

இங்கு 5 ரோடுகள் சந்திப்பு உள்ளது. ஏற்கனவே, இங்கு தரைமட்ட ரவுண்டானா அமைப்பதாக முடிவு செய்து பணிகளை தொடங்கினர். ஆனால், அந்த பணி முழுமையடையாத நிலையில் மீண்டும் மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால், எந்த பயனும் இல்லை. தற்போது, இந்த பகுதியில் புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதை முறையாக இயக்க வேண்டும். அரசு தலைமை மருத்துவமனை பகுதியை பொருத்தவரை அதிகளவில் தனியார் மருத்துவமனை உள்ள பகுதியாகும். ஆம்புலன்ஸ் அதிகமாக வரும். எனவே அதற்கேற்ப சிக்னலை அமைத்து போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : state hospital road ,
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது