×

தாழையூத்து அருகே தென்கலம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு வீடுகள், மின்கம்பங்கள் சேதம்

தாழையூத்து, மே 17: தாழையூத்து அருகில் உள்ளது தென்கலம் ஊராட்சி. மானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த பகுதியில் உள்ள நல்லம்மாள்புரம், காந்திநகர், புளியங்கொட்டாரம், தென்கலம்புதூர் பகுதிகளில் நேற்று முன்தினம் பயங்கர சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்தும், மரங்கள் முறிந்து விழுந்தன. வீட்டின் ஓடுகள் சேதமானது.

காந்திநகரில் மின்கம்பம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது, அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் வெளியில் ஓடி விட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அங்குள்ள பல வீட்டின் மேற்கூரைகள் காற்றில் அடித்தும் செல்லப்பட்டது. மேலும் தென்கலம்புதூரில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தும், கடைகளின் மேற்கூரை நொறுங்கியது.

அதேபோல் நல்லம்மாள்புரத்திலும், புளியங்கொட்டாரத்திலும் மரங்கள் முறிந்தும், வீட்டின் மேல்பகுதி உடைந்தது. அதே பகுதி விவசாயி கணபதி என்பவரது ஆடு மின்னல் தாக்குலுக்கு உயிரிழந்தது. பல இடங்களில் சேதமடைந்த மின்கம்பங்களை மின்வாரியத்தினர் விடிய விடிய சரிசெய்த போதும், அதிக அளவிலான சேதம் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் இன்னும் சீரான மின்சாரம் வழங்கப்படவில்லை.

இதனால் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட விஏஓ நேற்று மதியம் வரையிலும் சேதத்தினை பார்வையிட வரவில்லை என்றும், பலமுறை அவருக்கு போன் செய்த போதும் கண்டு கொள்ளவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் கூறினர். இதையடுத்து கிராம மக்களே முடிந்து விழுந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மாவட்ட கலெக்டர், தங்கள் பகுதியில் விரைவாக பராமரிப்பு பணிகளை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென்றும், வீடுகள், கடைகளை இழந்து நிற்கும் தங்களது பகுதி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தென்கலம் ஊராட்சி பகுதி மக்களின் பாதிப்புகளை சரிசெய்திடவும், சேதப்பகுதியினை உடனடியாக பார்வையிட வராத கிராம நிர்வாக அதிகாரி மீதும் கலெக்டர் நடவடிக்கை எடுத்திட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Houses ,part ,town ,reef ,
× RELATED ஆப்கானிஸ்தானில் நேற்று பெய்த திடீர்...