×

பகவதியம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்

கன்னியாகுமரி, மே. 17: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விஷேச பூஜை, தீபாராதனை, அன்னதானம், பக்தி நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், சமய உரை, இரவில் அம்மன் வாகனத்தில் வீதி உலா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 7ம்திருவிழாவான நேற்று முன்தினம் இரவு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இமயகிரி வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தொழில் அதிபர்கள் கோபி, சந்திரன், கோபாலகிருஷ்ணன், கோயில் மேலாளர் ஆறுமுகநயினார், தலைமை கணக்காளார் ஸ்ரீராமச்சந்திரன்  ஆகியோர் கலந்து கொண்டனர். அம்மன் வாகனம் சன்னதிதெரு, ரத வீதிகள் சுற்றி கோயிலை வந்தடைந்தது.

வழிநெடுக பக்தர்கள் தேங்காய் பழம், திருக்கண் சாத்தி அம்மனை வழிப்பட்டனர். நேற்று  அதிகாலை 5 மணிக்கும், காலை 10 மணிக்கும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகலில் அன்னதானம், மாலை மண்டகபடி, சமய உரை போன்றவை நடந்தது. இரவு 8.30 மணிக்கு சன்னதி தெருவில் அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சி நடந்தது. 9ம் திருவிழாவான இன்று (வெள்ளிக் கிழமை) அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. மதியம் அன்னதானம், இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10ம் திருவிழாவான நாளை (சனிக் கிழமை) காலை 7 மணிக்கு அம்மனுக்கு கடலில் ஆராட்டு நடக்கிறது.  இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோயில் மேலாளர் ஆறுமுக நயினார்,  தலைமை கணக்காளர் ஸ்ரீராமசந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள். படகு சேவை 2 மணி நேரம் நிறுத்தம்: தோரேட்டத்தையொட்டி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை படகு போக்குவரத்து 2 மணி நேரம் நிறுத்தப்படுகிறது.  10 மணிக்கு பிறகு வழக்கம் போல படகு போக்குவரத்து நடைபெறும்.

Tags : theater ,Bhagavadyamman ,
× RELATED திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை...