×

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோயாளிக்கு அறுவை சிகிச்சை: டீன். ராதாகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில், மே 17: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோயாளிக்கு சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்(பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய் வேதி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. திங்கள், வியாழக்கிழமைகளில் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. இந்த சிறப்பு பிரிவுகள் மூலம் கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோய்க்கான சிறப்பு அறுவை சிகிச்சைகளும், அதற்கு பின்னர் தேவைப்படும் ஹீமோதெரபி சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. இதுவரை 48க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சையும், 294 நோயாளிகளுக்கு ஹீமோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.

ஒருவகையான மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் ஏற்கனவே மூன்று அறுவை சிகிச்சை செய்த பின்னரும் புற்றுநோய் மீண்டும் ஏற்பட்ட தாழக்குடியை சேர்ந்த 55 வயதான பெண்ணுக்கு கடந்த 30ம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்டனர். இதில் நோயாளிக்கு நெஞ்சுக்கூடு எலும்புகளில் புற்றுநோய் பரவியிருந்ததால் 3 மார்பக எலும்புகள் அகற்றப்பட்டு அதற்கு ஈடாக முதுகில் இருந்து சதை எடுத்து ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. நோயாளி அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பகுதியில், உடல் தேறி வரும் நிலையில் உள்ளார். மேலும் இவருக்கு தேவைப்படும் ஹீமோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட உள்ளது. இதனை போன்று வாய் பகுதியில் காணப்படும் புற்றுநோய்,

கர்ப்ப பை புற்றுநோய் போன்று பல்வேறு புற்றுநோய்களுக்கும் சிறப்பு சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கதிர்வீச்சு சிகிச்சைக்கான சிறப்பு பிரிவும் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் ஆறுமுகவேலன், டாக்டர்கள் பிரணித் பெல்ஸ், ரவிச்சந்திரபாண்டியன், ரபீக்மீரான், ஆக்சி தர்சினி, ரெனிமோள், கலைக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். புற்றுநோய்க்கு சிறந்த முறையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவை டீன் பாராட்டினார். ஒரே ஆண்டில் 1721 பேர் புற்றுநோய் சிகிச்சைக்காக வருகை இது தொடர்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் மேலும் கூறுகையில், ‘புற்க்ஷறுநோய் அறுவை சிகிச்சைகள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கதிர்வீச்சு சிறப்பு சிகிச்சை நிபுணருடன், அறுவை சிகிச்சை நிபுணருடன் புதிய சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை 1721 பேர் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக பதிவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்றார்.

Tags : Asaripallam Government Medical College Hospital: Dean ,Radhakrishnan ,
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்