×

குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள், உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

புதுக்கோட்டை, மே 17: புதுக்கோட்டை நகராட்சி, ஆயுதப்படை மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அனைத்து பள்ளி வாகனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து நேற்று ஆய்வு நடைபெற்றது.
பள்ளி வாகனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்த ஆய்வினை கலெக்டர் உமாமகேஸ்வரி  பார்வையிட்டார். பின்னர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையிலும், சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டும் விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிடவும், மாவட்ட நிர்வாகம் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து சாலை பாதுகாப்புக்கென பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் செயல்பட உள்ளது. இந்நிலையில்  பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடவும், ஓட்டுநர்களுக்கு சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்திடவும், அனைத்து பள்ளி வாகனங்களையும் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் இன்றைய தினம் புதுக்கோட்டை வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்கள், புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது.


இந்த ஆய்வில் வாகனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துதல், தீயணைப்புக்கருவி, முதலுதவிப்பெட்டி, டயர், சீட், கண்ணாடி, பிரேக், ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்ற 16 வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும்  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  பள்ளி வாகனங்களில்  புதுக்கோட்டை மற்றும் ஆலங்குடி வட்டாரத்தில் உள்ள 70 பள்ளிகளை சேர்ந்த 303 பள்ளி வாகனங்களும், அறந்தாங்கி வட்டாரத்தில் உள்ள 27 பள்ளிகளை சேர்ந்த 176 பள்ளி வாகனங்களும், இலுப்பூர் வட்டாரத்தில் உள்ள 23 பள்ளிகளை சேர்ந்த 82 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 120 பள்ளிகளை சேர்ந்த 561 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. குறிப்பாக அனுமதியில்லாத வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து செல்லுதல், ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் அபாயகரமான நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு  சட்டரீதியான கடும் நடவடிக்கையினை உடனுக்குடன் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி வாகனங்களை பள்ளி வாகனங்களாக இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் வாகனங்கள் மூலம் பள்ளி குழந்தைகள் ஏற்றிச் செல்லப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.  எனவே, அனைத்து பள்ளிகளிலும் இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய பள்ளி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். என்றார். இந்த ஆய்வின் போது எஸ்பி செல்வராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) கார்த்திகேயன், துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : school ,owners ,vehicles collector ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி