இடங்கணசாலை பேரூராட்சியில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் புதிதாக தொட்டிகள் கட்ட கோரிக்கை

இளம்பிள்ளை, மே 17:  தொடர் போராட்டங்களை அடுத்து இடங்கணசாலை பேரூராட்சியில் டிராக்டர் மூலம் நேற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும், குடிநீர் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது கத்திரி வெயில் வாட்டியெடுப்பதால், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட கே.கே.நகர், இ.மேட்டுக்காடு, மாட்டையாம்பட்டி, காடையாம்பட்டி, மோட்டுர், முருகன் நகர், காந்தி நகர், புவனகணபதி கோயில் தெரு, தூதனூர்  உள்ளிட்ட  பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வந்து அடுத்தடுத்து 3 நாட்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இடங்கணசாலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நேற்று பல்வேறு வார்டுகளில் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இதனிடையே, சேலம் பேரூராட்சிகள் இணை இயக்குனர் முருகனிடம், பொதுக்கள் அளித்த கோரிக்கை மனுவில், இடங்கணசாலை பேரூராட்சி 13 மற்றும் 14வது வார்டு மோட்டூர், புவனகணபதி கோயில் தெரு, முருகன்நகர், பலகாரத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு மினி டேங்க் மூலம் குடிநீர் விநியோகிப்பதால் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, தனியாக 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி, சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

× RELATED குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்