×

சந்திரகிரியில் 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி அமைச்சருடன் தெலுங்கு தேசம் வேட்பாளர் சாலைமறியல்

* திருப்பதியில் பரபரப்பு * போக்குவரத்து பாதிப்பு


திருப்பதி, மே 17: சந்திரகிரியில் 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி அமைச்சருடன் தெலுங்கு தேசம் வேட்பாளர் சாலைமறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் 11ம் தேதி 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் குண்டூர், பிரகாசம், நெல்லூர் மாவட்டத்தில் பல்வேறு காரணத்தினால் 5 வாக்குச்சாவடி மையத்திற்கு கடந்த மாதம் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் சித்தூர் மாவட்டம், சந்திரகிரி தொகுதியில் நடை பெற்ற தேர்தலில் கம்ம கண்டிகை, புலிவர்த்திபள்ளி உட்பட 7 வாக்குச்சாவடி மையங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க விடாமல் இடையூறு செய்ததாக அக்கட்சியின் வேட்பாளர் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டி மாநில தேர்தல் அலுவலர் கோபாலகிருஷ்ண திரிவேதிக்கு புகார் அளித்தார்.  இதேபோன்று தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் இரண்டு வாக்குச்சாவடி மையத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்க விடாமல் இடையூறு செய்ததாக அக்கட்சியின் வேட்பாளர் புலிவர்த்தி நானி புகார் அளித்திருந்தார்.


இதற்கிடையே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கம்ம கண்டிகை, புலிவர்த்தி பள்ளி உட்பட 5 வாக்குச்சாவடி மையத்திற்கு மட்டும் வருகிற 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் திருப்பதி சப்-கலெக்டர் அலுவலகம் முன் தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறி ஆந்திர தொழில் துறை அமைச்சர் அமர்நாத் ரெட்டி, சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதி தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் புலிவர்த்தி நானி ஆகியோர் கட்சி தொண்டர்களுடன் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 7 வாக்குச்சாவடி மையத்தில் மறு வாக்குப் பதிவுக்கு கேட்ட நிலையில் 5 வாக்குச்சாவடி மையத்தில் மறுவாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி இரண்டு வாக்குச்சாவடி மையத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது.

 
எனவே 19ம் தேதி நடைபெறக்கூடிய மறுவாக்குப்பதிவின் போது தற்போது அறிவிக்கப்பட்ட 5 வாக்குச்சாவடி மையங்களுடன் சேர்த்து தெலுங்கு தேசம் கட்சி புகார் அளித்துள்ள இரண்டு வாக்குச்சாவடி மையத்திற்கும் சேர்த்து 7 மையத்திலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து திருப்பதி சப்-கலெக்டர் மகேஷ்குமாரிடம், வேட்பாளர் புலிவர்த்தி நானி மனு அளித்தார்.


தேர்தல் அதிகாரி அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை

இதுகுறித்து மாநில தேர்தல் அதிகாரி கோபாலகிருஷ்ண திரிவேதி கூறுகையில், `மறுவாக்குப்பதிவு நடத்தக் கூடிய பகுதிகளில் வேட்பாளர்கள் மற்றும் புகார்தாரர்கள் அளிக்கும் தகவலை மட்டும் வைத்து மறு வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு உத்தரவு அளிக்கவில்லை. மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அந்தந்த மையத்தில் உள்ள தேர்தல் அதிகாரி வழங்கிய அறிக்கையை வைத்தே மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

Tags : Telangana ,candidate ,
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!