×

200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கர்நாடக பக்தர் மீட்பு திருப்பதி மலைப்பாதையில் பரபரப்பு

திருமலை, மே 17: திருப்பதி மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கர்நாடக பக்தர் பத்திரமாக மீட்கப்பட்டார். திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள அவ்வாச்சாரி கோணா என்ற இடத்தில் உள்ள பள்ளத்தாக்கில் இருந்து ஒருவரது அலறல் சத்தம் நேற்று காலை அவ்வழியாக சென்ற பக்தர்களுக்கு கேட்டது. உடனடியாக திருமலை 2வது காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் பக்தர்கள் சத்தம் கேட்டதாக கூறிய இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு 200 அடி ஆழத்தில் ஆண் ஒருவர் இருப்பது தெரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் பள்ளத்தில் இறங்கி அவரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரித்தபோது, கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்த நிவாஸ் என்பதும், மலைப்பாதையில் உள்ள தடுப்பு சுவர் மீது ஏறி நடந்து சென்ற போது கால் தவறி பள்ளத்தில் விழுந்ததும் தெரியவந்தது. மேலும், நிவாஸ் மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : devotee ,devotees ,grounds ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி