×

அரூர் அருகே 290 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு 22 பஸ்களின் தகுதி சான்று ரத்து

அரூர், மே 17: அரூரில் போக்குவரத்து அலுவலகம் சார்பில், 290 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 22 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அரூர் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்கள், நம்பிப்பட்டியில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் ஆய்வு பணியை தொடங்கி வைத்தார். அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், கண்காணிப்பாளர் செல்வமணி, கண் மருத்துவர் கலையரசன், அரசு மருத்துவர் அருள் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகனங்கள், ஓட்டுநர்களை ஆய்வு செய்து சான்று வழங்கினர்.

ஆய்வின் போது, அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து அம்சங்களும் சரியாக உள்ளதா என சரிபார்க்கப்பட்டு, குறைபாடு உள்ள வாகனங்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும், தகுதி இல்லாத வாகனங்களின் சான்று ரத்து செய்தும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஓட்டுநர்களுக்கு மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் மருத்துவ பரிசோதனைகளை செய்தனர். இதில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 41 தனியார் பள்ளிகளின் 290 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 22 பஸ்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது. 17 பஸ்கள் குறைபாடுகள் நிவர்த்தி செய்ய திருப்பி அனுப்பப்பட்டன.

Tags : Arur ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...