×

வேலூர், ஆற்காட்டில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

வேலூர், மே 17: வேலூர் மற்றும் ஆற்காட்டில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் நேற்று திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அணைகள், ஏரிகள் உட்பட நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் மாநிலம் முழுவதும் குடிநீருக்காக காலிக்கூடங்களுடன் பொதுமக்கள் தண்ணீர் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யாத அதிகாரிகளை கண்டித்து ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூர் மாநகராட்சி சைதாப்பேட்டையில் அண்ணா சாஸ்திரி தெரு, கானாறு குடிபா தெரு, சுருட்டுக்கார தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 2 வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திடீரென நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போத,குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


ஆற்காடு: ஆற்காடு அடுத்த அருங்குன்றம் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களது குடிநீர் தேவைக்காக பைப் லைன் மற்றும் போர்வெல்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக 20க்கும் மேற்பட்ட போர்வெல்களில் பழுது ஏற்பட்டதால் சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். இதனால், நீண்டதூரம் சென்று பொதுமக்கள் தண்ணீர் பிடித்துவரும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 7.30 மணியளவில் அருங்குன்றம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அருகே காலிக்குடங்களுடன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பிடிஓ வெங்கடாச்சலம், ஒன்றிய பொறியாளர் ஏகநாதன், வருவாய் ஆய்வாளர் ஷம்ஷாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ‘பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய்களையும், ஏரி நீர்வரத்துக் கால்வாய்களையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், நிலத்தடி நீர் மட்டம் எங்கள் பகுதியில் குறைந்துள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைத்து போர்வெல்களை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். அதற்கு பிடிஓ, உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, பஸ், லாரிகளை விடுவித்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Vellore ,protest ,road ,Arcot ,
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி