×

அரக்கோணம் அருகே மணல் கடத்தலுக்காக ஆற்றில் பள்ளம் தோண்டியபோது மணல் சரிந்து தொழிலாளி பலி: மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை

அரக்கோணம், மே 17: அரக்கோணம் அருகே மணல் கடத்தலுக்காக பள்ளம் தோண்டிய போது ஆற்றில் மணல் சரிந்து ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் டிராக்டர் உரிமையாளர் உட்பட 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலம், வளர்புரம், மின்னல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆறு, ஏரி, குளம், குட்டை, தனியார் நிலங்களில் மண், மணல் போன்றவைகளை அனுமதியின்றி எடுத்து லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கடத்தி விற்பனை செய்யப்படுகிறது. இதனை வருவாய், காவல் துறையினர் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில், அரக்கோணம் அடுத்த வளர்புரம் பகுதியில் உள்ள நந்தியாற்றின் கரையையொட்டி நேற்று காலை 4 பேர் பள்ளம் தோண்டி மணல் திருடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென மணல் சரிந்து 4 பேரும் அதில் சிக்கினர். இதில் மூச்சுதிணறல் ஏற்பட்டு ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், டிஎஸ்பி விஜயகுமார், தாலுகா இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இதில், மணல் சரிவில் சிக்கி இறந்தவர் வளர்புரம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல்(27) என்பதும், மயங்கிய நிலையில் இருந்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த சர்க்கில் தாஸ்(45), நாகராஜ்(32), ஏழுமலை(35) என தெரியவந்தது. மேலும், இவர்கள் மணல் கடத்தல் கும்பலிடம் கூலிவேலை செய்து வந்ததும், முதலில் மணலை குவியல் குவியலாக சேகரித்து பிறகு லாரி மற்றும் டிராக்டர்களில் கடத்திச்செல்வது தெரியவந்தது. இதுகுறித்து, அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, நந்தியாற்று பகுதியில் மணல் கடத்தியதாக வளர்புரம் பகுதியை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் ஜோதி(42), டிரைவர் மணிகண்டன்(30) ஆகியோரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Sand worker ,river ,Arakkonam ,
× RELATED நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி