×

திருநின்றவூர் முதல் திருவள்ளூர் வரை பில்லர் போட்டு 4 ஆண்டாகியும் கிடப்பில் நெடுஞ்சாலை பணிகள்: விரைந்து முடிக்க வலியுறுத்தல்

திருவள்ளூர்: சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருநின்றவூர் முதல் திருவள்ளூர் டோல்கேட் வரை ஆங்காங்கே சிறு பாலங்கள் அமைக்க பில்லர்கள் போடப்பட்ட நிலையில் சாலை அமைக்கும் பணி 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகின்றனர். மாநில தலைநகரான சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியை இணைக்கும் வகையில் தேசியநெடுஞ்சாலை உள்ளது.  இந்த சாலையின் மொத்த நீளம் 442 கி.மீ. இதில் 360 கி.மீ சாலை ஆந்திர மாநிலத்திலும், 82 கி.மீ சாலை தமிழகத்திலும் உள்ளது. இந்த சாலை தமிழகத்தில் சென்னை, பாடி, ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், கனகம்மாசத்திரம், திருத்தணி, பொன்பாடி சோதனை சாவடி வரை உள்ளது.

அங்கிருந்து ஆந்திர மாநிலம் துவங்குகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து திருநின்றவூர் வரையிலும், திருவள்ளூர் டோல்கேட்டில் இருந்து பொன்பாடி வரையிலும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதற்கான சுங்க வரியும் பட்டறைபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநின்றவூரில் இருந்து திருவள்ளூர் டோல்கேட் வரை நெடுஞ்சாலை அமைக்க நிலங்கள் மீட்கப்பட்டு தேவைப்படும் இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கவும் பில்லர்கள் எழுப்பி கட்டப்பட்டன.ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பணிகள் கிடப்பில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் திருநின்றவூரில் இருந்து திருவள்ளூர் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகவும் அவதிப்படுகின்றனர்.

மேலும், இச்சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருநின்றவூர் முதல் திருவள்ளூர் டோல்கேட் வரை நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை அமைக்கும் பணியை துவக்கி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : highway highway ,Thiruninavoor ,Thiruvallur ,
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...