×

மதுராந்தகத்தில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை

மதுராந்தகத்தில் குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து பொதுமக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட, 24 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த வார்டுகளில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை நாள்தோறும் குடிநீர் வினியோகப்பட்டது.  கடந்த சில வாரங்களாக பல இடங்களில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீரும், ஒருசில பகுதிகளில் 2 நாளைக்கு ஒருமுறை பொது குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு குழாய்களில் வரும் குடிநீரும் சுமார் அரைமணி நேரத்துக்குள் நிறுத்தப்படுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதி மக்கள் குடிநீர் தேடி காலி குடங்களுடன் பல இடங்களில் சுற்றி அலைந்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும்,

எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து, மதுராந்தகம்-சென்னை நெடுஞ்சாலையில், பஸ் நிலையம் நுழைவாயில் எதிரே மற்றும் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை 8 மணியளவில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அனைத்து வார்டுகளிலும் போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதி கூறினர். இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Siege ,office ,Madurai ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...