×

காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

காரியாபட்டி, மே 16: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையால், அவசர காலங்களில் நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.  காரியாபட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.  இங்கு 42 படுக்கை வசதி உள்ளன. 50க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 6 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். நோயாளிகளுக்கு மதியம் ஒரு மணி வரை சிகிச்சை அளிப்பர். பின்னர் 2 டாக்டர்கள் வீட்டிற்கு சென்றுவிடுவர். மாலை 5 மணி வரை ஒரு மருத்துவர் பணியில் இருப்பர். இவ்வாறு சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், மூன்று மருத்துவர்கள் மேல்படிப்புக்கு சென்று விட்டனர். தற்போது 3 மருத்துவர்கள் மட்டுமே மருத்துவமனை பணியாற்றி வருகின்றனர். இரவில் மருத்துவர் இருப்பது கிடையாது. இரவு நேரங்களில் உள் நோயாளிகளுக்கு ஏதாவது நேர்ந்தால் செவிலியர்கள் சிகிச்சை அளிப்பார். நோயின் தன்மை தீவிரமாக இருந்தால், அலைபேசி மூலம் மருத்துவரிடம் தகவல் பெற்று சிகிச்சை அளிக்கின்றனர். விபத்தில் சிக்கியவர்களுக்கு பல மணி நேரம் கழித்து சிகிச்சை அளிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.


இதனால், மதுரை, விருதுநகர் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்கின்றனர். விபத்தில் சிக்குவோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவந்தால் மருத்துவர்கள் இல்லாத நிலையில் ஏன் கொண்டு வந்தீர்கள் என பணியாளர்கள் அசட்டையாக தெரிவிக்கின்றனர். இதனால், 108 ஊழியர்கள் காரியாபட்டி பகுதியில் விபத்துகளில் சிக்கியவர்களை முதலுதவி செய்யாமல் மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை நகரங்களுக்கு எடுத்து செல்கின்றனர். அங்கு செல்வதற்குள் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொது மக்களின் நலன் கருதி போதிய மருத்துவர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சரத் ஆறுமுகம் என்பவர் கூறுகையில், ‘அரசு மருத்துவமனையில் மாலை நேரங்களில் சென்றால் மருத்துவர் இல்லை என நர்ஸ்கள் தெரிவிக்கின்றனர். டூவீலர் விபத்தில் சிக்கிய நண்பர் ஒருவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், இங்கு ஏன் கொண்டு வந்தீர்கள் என நர்ஸ்கள் கேட்கின்றனர். விபத்தில் சிக்கியவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி, போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றார்.  ஹரி 108 ஊழியர்: கடந்த ஒரு மாத காலமாக காரியாபட்டி பகுதியில் ஏற்படும் விபத்தில் காயம் அடைந்தோரை ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவிக்கு அழைத்து வந்தால் இங்குள்ள நர்ஸ்கள், மருத்துவர் இல்லை என சொல்லுகின்றனர். ஒரு உயிரை காப்பாற்ற உரிய நேரத்தில் கொண்டு வந்து சேர்ப்பது எங்கள் கடமை. ஆனால், முதலுதவி செய்ய கூட மருத்துவர் இல்லைன்னு மக்களிடம் சொல்ல முடியவில்லை’ என்றார்.

Tags : doctor ,Kariapatti Government Hospital ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...