×

கூடலூர் பகுதியில் வீணாகும் குடிநீர்

கூடலூர், மே 16: கூடலூர் நகராட்சிப்பகுதியில் உள்ள ஒருசில நகராட்சி பொதுக்குழாய்களில் தண்ணீர் அடைக்கும் மூடிகள் இல்லாததால் இரவு முழுவதும் குடிநீர் வீணாகிறது. கூடலூர் நகராட்சியில் உள்ள இருபத்தியோரு வார்டு பொதுமக்களுக்கும், லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் முலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் சப்ளை குறைவாக உள்ள தெருக்களில் ஆங்காங்கே நகராட்சி நிர்வாகம் மூலம் ஆழ்துளைக்கிணறு அமைத்து மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்புகிறது. பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப தொட்டியிலிருந்து தண்ணீரை பிடித்துக்கொள்கின்றனர். தற்போது கோடைகாலம் தண்ணீர் பற்றாக்குறை என்பதால் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் தெருக்குழாய்களில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்தபின், குழாயை அடைக்காததால், குழாயிலிருந்து வீணாகும் தண்ணீரை நிறுத்த கூடலூர் நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
கூடலூர் 6வது வார்டு அருந்ததியர் தெருவில் உள்ள நகராட்சி தெருக்குழாய்களில் பொதுமக்கள் தேவைக்கு தண்ணீர் பிடித்தபின் அடைக்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால் பலமணி நேரம் சப்ளை செய்யப்படும் குடி தண்ணீர் இரவு முழுவதும் வீணாகிறது. தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்துள்ள நேரத்தில், தண்ணீர் வீணாவதை தடுக்க கூடலூர் நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பள்ளி மாணவர்களுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி: மே 7 முதல் 17 வரை நடக்கிறது