×

உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் தரமற்ற சாலை அமைப்பதாக புகார்

உத்தமபாளையம், மே 16: உத்தமபாளையம் மாநிலநெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் அமைக்கப்படும் சாலைகள் தரமற்றதாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனை ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் பீல்டுகளுக்கே வருவதில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் கம்பம், குமுளி மாநிலநெடுஞ்சாலை, சின்னமனூர், கோம்பை, உ.அம்மாபட்டி, கோகிலாபுரம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கம்பம்மெட்டு உள்ளிட்ட சாலைகள் வருகின்றன. இவை தவிர கோம்பை ராமக்கல்மெட்டு சாலை, கம்பம்மெட்டு மலைப்பாதை, குமுளி மலைப்பாதை, உள்ளிட்டவை வருகின்றன. சாலைகள் பராமரிப்பிற்காகவும், ஏற்கனவே உள்ள சாலைகளை புதிதாக போடுவதற்கும் டெண்டர் கோரப்பட்டு அவ்வப்போது பணிகள் நடக்கின்றன. குறிப்பாக மழை அதிகம் பெய்யும் காலங்கள், புயல் மழையினால் இயற்கை பேரழிவு உண்டாகும் காலங்களில் மாநில நெடுஞ்சாலைகளில் சேதமான சாலைகள் பராமரிப்பு, போக்குவரத்து பாலம் கட்டுதல், சிறிய நீரோடை பாலங்கள் கட்டுதல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன.


இதனை நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு என்றே உத்தமபாளையத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. இதில் கோட்டப்பொறியாளர், இளநிலை பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் உள்ளனர். பணிகள் நடக்கும்போது தார்ச்சாலையாக இருந்தால் அரசு விதித்துள்ள விதிகளின்படி முறையாக போடப்படுகிறதா, தாரின் அளவு, கல்குவியல் அளவு,  போன்றவை பார்க்கப்பட வேண்டும். பாலங்கள் கட்டும்போது கம்பிகள் முறையாக போடப்படுகிறதா, இதன் தரம், சிமென்ட் தரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இதன் பின்பு மாவட்ட அளவில் செயல்படும் மாநில நெடுஞ்சாலைத்துறையின் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தனியாக ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிய பின்பே சம்பந்தப்பட்ட சாலை எந்தவிதமான தரத்தில் செய்யப்பட்ட விபரம் தெரியவரும். ஆனால் இப்போதோ அப்படி நடப்பதாக தெரியவில்லை.


குறிப்பாக கோட்ட அளவில் உள்ள அதிகாரிகளும், மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளும் பீல்டுகளுக்கே செல்வதில்லை என்ற புகார் உள்ளது. இதேபோல் கடந்த ஒன்றரை வருடத்தில் பல இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை விதிகளின்படி போடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மறுபுறம் அதிகாரிகள் உரிய இடங்களுக்கு நேரில் செல்கின்றனரா என்பதையும் மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள், கோட்டபொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறி உள்ள புகாரில், ‘உத்தமபாளையம் கோட்டத்தில் நடக்கும் புதிய சாலை அமைக்கும் பணி, பராமரிப்பு பணிகள், சாலை ஓரங்களில் செய்யப்படும் பணிகளை முறையாக ஆய்வு செய்ய அதிகாரிகள் யாரும்
வருவதில்லை. இதனால் கான்ட்ராக்ட் எடுத்தவர்கள் தங்கள் இஷ்டப்படி விதிகளுக்கு புறம்பாக சாலைகளை அமைப்பதால் இதன் ஆயுள் காலத்திற்கு முன்பே சாலைகள் மிக மோசமாக சேதம் அடைகின்றன. இதனை பற்றிய புகார்கள் மாவட்ட அளவில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு சென்றும் நடவடிக்கை இல்லை. சாலைகள் அமைத்த பின்பு இதனை கண்காணிக்கும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் ஆய்வுகளை முறையாக மேற்கொள்வதில்லை என்ற புகார் உள்ளது. தேனி கலெக்டர் இதில் தலையிட வேண்டும்’ என்றனர்.

Tags : Uthamapalayam ,state roads ,road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...