×

பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் பயணத்திற்கு தடை ஏற்படுத்தும் வேகத்தடைகள் அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

பரமக்குடி, மே 16: பரமக்குடி முதல் முதுகுளத்தூர் வரையிலான வேகத்தடைகளால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பரமக்குடி முதல் முதுகுளத்தூர் வரையில் 27 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யவேண்டி உள்ளது. இந்த சாலையில் தொழில் நுட்பக்கல்லூரி, கலை மற்றம் அறிவியல் கல்லூரிகள், மின்சாரம் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளதால், அதிகளவில் கனரக வாகனங்கள் மற்றும் தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள், தனியார் வாகனங்கள் என தினமும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. பரமக்குடி முதல் முதுகுளத்தூர் வரை சுமார் 15 இடங்களில் வேகத்தடைகள் உள்ளதால், பேருந்து மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஓவ்வொரு ஊர்களின் நிறுத்தத்திலும் வேகத்தடைகளை அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். வேகத்தடைகள் அமைக்கும் போது வாகனத்தில் வருபவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக ஒளிரும் போர்டுகளும், வேகத்தடை உள்ளது என்று தெரிவிக்கும் விதமாக வெள்ளை கோடுகளும் சாலையில் வரையப்படவேண்டும்.


ஆனால் சாலை விதிகள்படி முறையாக அமைக்கப்படாததால், பேருந்து மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை தெரியாமல் சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. பரமக்குடியில் இருந்து டூவீலரில் செல்பவர்கள் அரை மணி நேரத்தில் முதுகுளத்தூர் சென்றுவிடலாம். ஆனால் சாலையில் உள்ள வேகத்தடைகளால் ஓரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. புதிதாக டூவீலரில் முதுகுளத்தூர் செல்பவர்கள் வேகத்தடைகள் தெரியாமல் தூக்கி வீசப்பட்டு உயிர்பலியாகும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
ஆகையால், அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் விதமாக வேகத்தடை இருப்பதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை நெடுஞ்சாலை துறையினர் செய்யவேண்டும் என வாகன ஓட்டிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motors ,pedestrians ,road ,Paramakudi-Mudukulathur ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!