×

பன்றிகளை பிடித்து சென்றதால் நகராட்சி அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம், மே 16: ராமநாதபுரத்தில் சொந்த இடத்தில் அடைத்து வைத்த பன்றிகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து சென்றதாக 50க்கும் மேற்பட்ட பன்றி வளர்ப்போர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் நகரில் ரயில் நிலையம் அருகே அண்ணாநகர், சூரன்கோட்டை ஊராட்சியில் எம்ஜிஆர் நகர், சக்கரக்கோட்டை ஊராட்சியில் மஞ்சன மாரி நகர் உள்ளிட்ட பகுதியில் பன்றிகளை வளர்க்கும் காட்டுநாயக்கர் இனத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். நகரில் 2ஆயிரம் பேர் வசிக்கும் நிலையில் அனைவருமே இத்தொழிலை செய்து வருகின்றனர். நகர் பகுதியை ஒட்டிய இடங்களில் வளர்க்கும் பன்றிகளை பட்டியில் போட்டு அடைத்து பராமரிக்காமல் தெருக்களில் விடுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதன் பேரில் நகராட்சியின் சார்பில் பன்றிகள் வளர்ப்போருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு பன்றிகளை அடைத்து வைக்க அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக பலமுறை தெரிவித்தும் நகர் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை அடைத்து வைக்காத நிலையில் நகராட்சியின் சார்பில் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று காலையில் நகராட்சி சார்பில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்து வாகனங்களில் ஏற்றினர். இதை அறிந்த பன்றி வளர்ப்பவர்கள் அவர்களிடம் தகராற்றில் ஈடுபட்டு வாகனத்தில் இருந்த பன்றிகளை மீட்டனர். பின்னர் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பட்டிகளில் உள்ள பன்றிகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து செல்கின்றனர் என நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பன்றி வளர்க்கும் பூவலிங்கம் கூறியதாவது:‘ எங்கள் குலத்தொழில் பன்றி வளர்ப்பதுதான். நகரின் முக்கிய இடங்களில் பன்றிகள் நடமாடுவதை அப்புறப்படுத்த சொல்லி நோட்டீஸ் அனுப்பினார்கள். நாங்கள் அப்புறப்படுத்தி விட்டோம். தற்போது நாங்கள் பன்றி வளர்க்கும் இடத்திற்குள் வந்து பன்றிகளை பிடித்து செல்கிறார்கள். அதை கேட்டதால் நகராட்சி அதிகாரிகள் பன்றிகளை தெருவில் விடக்கூடாது என எங்களை மிரட்டுகின்றனர்’என தெரிவித்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை