×

‘நைட் டூட்டி வேண்டாம்...’ பெண் அதிகாரிகள் எதிர்ப்பு

திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்தின்  உத்தரவின் பேரில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரூ.50  ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு சென்றால் பறிமுதல்  செய்யப்பட்டு வருகிறது. இதன்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் பறக்கும்படை  அமைத்து, வலம் வந்தபடி உள்ளனர். பறக்கும்படையில் ஒரு ஓட்டுநர்,  வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலான அதிகாரி, உதவி ஆய்வாளர்,  ஒரு காவலர் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் என 5 பேர் உள்ளனர். வரும் 19ம் தேதி  வரை இக்குழு சோதனைகளில் ஈடுபடும். 24 மணிநேரமும் ரோந்துப்பணி நடைபெறும்  வகையில் நாளொன்றிற்கு 3 ஷிப்ட்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். காலை 8  மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 1 ஷிப்ட்டும், மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி  வரை 1 ஷிப்ட்டும், இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை 1 ஷிப்ட்டும் என 24  மணி நேரத்திற்கு 3 ஷிப்ட்களில் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் பறக்கும்படையில் ஏராளமான பெண் அதிகாரிகளும்  பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் இரவு நேரங்களில் பணிநேரம்  வழங்கப்பட்டுள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெண் அதிகாரி  ஒருவர் கூறும்போது, ‘‘24 மணி நேரத்தை முறையாக எட்டு மணி நேரமாக  பிரிக்கவில்லை. இரவு நேரங்களில் பெண்களை பணிக்கு வர உத்தரவிட்டுள்ளதால்  இரவு முழுக்க நெடுஞ்சாலைகளில் தனியே நிற்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.  வாகனங்களை மோதுவது போல ஓட்டி வருவது, உடன் பெண் காவலர்கள் இல்லாமல்  இருப்பது, குடிபோதையில் வருபவர்களிடம் விசாரணை செய்வது என்பது உள்ளிட்ட  சொல்ல முடியாத சிரமங்களும் இருக்கின்றன.


இயற்கை உபாதைக்கு செல்ல கூட  அச்சமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை கூறியும்  இரவு நேரங்களிலேயே பணி  போடுகின்றனர். பணியை செய்வதில் எங்களுக்கு எந்த சிரமமுமில்லை. ஆனால், பகல்  நேரங்களில் முறையாக எட்டு மணி நேரமாக பிரித்து போட்டால் தாராளமாக பணி செய்ய  தயாராகவுள்ளோம். அதை விடுத்து இரவு நேரங்களில் 12 மணி நேரம் பணிநேரம்  என்பது மிகவும் சிரமமாக உள்ளது’’ என்றார்


Tags : protesters ,
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த நடவடிக்கை...