×

வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

மதுரை, மே 16: பொருட்கள் கொள்முதல் செய்த வகையில் ரூ.7 லட்சம் மோசடி செய்த வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சித்தாலங்குடியை சேர்ந்தவர் மகாராஜன்.
இவர் மதுரை மாவட்ட 4வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மாவட்டம் சித்தாலங்குடியில் உள்ள தனியார் உணவுப்பொருள் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக உள்ளேன். எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மைதா, ரவை, கோதுமை மற்றும் தவிடு ஆகியவற்றை வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்கிறோம். தனக்கன்குளத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற வியாபாரி, எங்கள் நிறுவன பொருட்களை கொள்முதல் செய்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.7 லட்சத்து 29 ஆயிரத்துக்கு பொருட்கள் கொள்முதல் செய்தார்.

ஆனால், அந்த பணத்தை தராமல் வேல்முருகன் மோசடி செய்துள்ளார். இது குறித்து திருநகர் போலீசில் புகார் செய்தோம். ஆனால் எங்கள் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வேல்முருகன் மீது வழக்குப்பதிந்து, எங்கள் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை பெற்றுத்தர போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கவுதமன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, “மனுதாரர் புகார் மீது திருநகர் போலீசார் வழக்குப்பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதுதொடர்பான அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.


Tags : dealer ,
× RELATED உளுந்து வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி