×

அதிகாலை நேர கண்காணிப்புடன் ரயில்களில் பயணிகளை போல் உளவு போலீசாரும் உலா

திண்டுக்கல், மே 16: கொள்ளையை தடுக்கவும், கொள்ளையர்களை பிடிக்கவும் ரயில்நிலையங்களில் அதிகாலை நேர கண்காணிப்புடன் ரயில்களிலும் பயணிகளை போல் உளவு போலீசார் உலா வருகின்றனர்.  கடந்த 2017ம் ஆண்டு ஆக.8ம் தேதி சேலம்- சென்னை ஓடும் ரயிலின் மேற்கூரையில் துளைபோட்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு எடுத்து சென்ற ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இவ்வழக்கில் 2 ஆண்டுகளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. பின்னர் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அளித்த தகவலின் அடிப்படையில் வடமாநிலங்களை சேர்ந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொள்ளை சம்பவம் ரயில் பயணிகள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

அதன்பின்பு தமிழகம் முழுவதும் அதிகாலை நேரத்தில் செல்லும் ரயில்கள் மற்றும் ரயில்நிலையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல், கொடைரோடு நிலையங்கள் வழியாக அதிகாலை நேரத்தில் தென்மாவட்ட ரயில்கள் அதிகளவில் செல்கின்றன. ரயில் நிலையம் அருகில் வரும்போதும், புறப்படும் போதும் ரயில்கள் மெதுவாக செல்லும். இந்த நேரத்தில் திருடர்கள் பயணிகளிடம் இருந்து நகை, பணத்தை பறித்து கொண்டு தப்பியோடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதுபோன்ற திருடர்கள் எளிதில் சிக்குவதும் கிடையாது. இதனால் அவர்களை பிடிக்கவும், கொள்ளையை தடுக்கவும் போலீசார் புதிய யுக்திகளை கையாள துவங்கியுள்ளனர்.

அதன்படி திண்டுக்கல் ரயில் நிலைய பகுதியில் வேடபட்டி, ஒத்தன்கண் பாலம், அனுமந்தன்நகர் ரயில்வே கேட் வரை துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல கொடைரோடு, பழநி ஆகிய ரயில் நிலையங்களுக்கு அருகே ரயில் மெதுவாக வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த போலீசார் தினமும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் அந்த பகுதியில் சந்தேக நபர்களின் நடமாட்டமும் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  மேலும் அனைத்து ரயில்களிலும் பயணிகள் போல் நடித்து, சக பயணிகளுக்கு மயக்க பிஸ்கட், குளிர்பானம், பால், மோர் கொடுத்து அவர்களின் நகை, பணம் உட்பட விலை உயர்ந்த பொருட்களை சிலர் திருடி செல்கின்றனர். ரயிலில் 2 நாள் பயணத்தின் போது முதல் நாள் நல்ல பிஸ்கட்டை கொடுப்பார்கள். 2ம் நாள் அவர்கள் மயக்க மருந்து தடவி வைத்து இருக்கும் பிஸ்கட்டை கொடுப்பார்கள். இது தெரியாத  பயணிகள் அருகில் அதை சாப்பிட்டு மயக்கமடைவார்கள். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களது  நகைகள், பணம், லேப்டாப், செல்போனை திருடி செல்வார்கள். நல்லவர்கள் மாதிரி பழகி உங்கள் உடமைகளை கொள்ளையடிக்க கூடும் என ரயில்வே போலீசார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இருந்தாலும் பயணிகளை சிலர் மயக்க மருந்து பிஸ்கட் கொடுத்து ஏமாற்றி வருகின்றனர். இதில் அதிகளவு இளைஞர்கள் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இவற்றை தடுக்கவும், உடமைகளை கண்காணிக்கவும் உளவு போலீசாரும்  பயணிகள் போல் உலா ரயில்களில் வருகின்றனர். இவர்கள் பயணிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசாருக்கு துணைபுரியவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : spy police ,passengers ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...