×

ஆத்தூர் ஒன்றியத்தில் ஓய்வு பந்தல் கூட இல்லாமல் 100 நாள் வேலை

செம்பட்டி, மே 16: ஆத்தூர் ஒன்றியத்தில் கோடை வெயிலை சமாளிக்க ஓய்வு பந்தல் உள்ளிட்ட திட்ட அம்சங்கள் இல்லாமல் 100 நாள் வேலை செயல்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.  திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் சாரல் இருந்த போதும் கடந்தாண்டை விட வெப்பத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது அக்னிநட்சத்திரமும் கொளுத்தி வருவதால் மாலை 6 மணி வரை மக்கள் நடமாட்டமே இல்லை. எனினும் மாவட்டத்தில் அக்னி வெயிலை பொருட்படுத்தாமல் 100 நாள் வேலை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் திட்ட அம்சங்கள் இல்லாமல் செயல்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக ஆத்தூர் ஒன்றியத்தில் பெருமளவு கிராமங்களில்  வேலை உறுதித்திட்ட பணிகள் பயனாளிகளுக்கு ஓய்வு பந்தல், குழந்தைகள் பராமரிப்பு போன்றவை ஏற்படுத்தி தராமல் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் திறந்தவெளி, நீர்நிலை பராமரிப்பு பணிகளில் இருப்பவர்கள் அவதிக்குள்ளாகும் நிலை தொடர்கிறது. குறிப்பாக கைக்குழந்தைகளுடன் பணிதளத்திற்கு செல்லும் பெண் பயனாளிகள் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. மேலும் கடந்த 2 நாட்களாக காலை முதலே வெப்பம் அதிகரித்துள்ளதால் பயனாளிகள் அருகிலுள்ள மர நிழல்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனால் வேலைநேரம் வழக்கத்தை விட குறைந்தும், ஓய்வுநேரம் அதிகரித்தும் வருவதால் பணி மதிப்பீடு, கூலி நிர்ணயத்தில் குறைவு ஏற்படும் நிலை நீடித்து வருகிறது. எனவே ஆத்தூர் ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு திட்ட அம்சங்களை செயல்படுத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : retirement ,
× RELATED வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்